உரிய ஆவணங்கள் இருந்தாலும் வெளிநாட்டவரை வெளியேற்றும் அதிகாரம் அரசுக்கு உண்டு

வெளிநாட்டைச் சேர்ந்தவர் உரிய ஆவணங்களுடன் இந்தியாவுக்கு வந்திருந்தாலும், எவ்வித முன்னறிவிப்பு நோட்டீஸும் இன்றி அவரை வெளியேற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என்று தில்லி

வெளிநாட்டைச் சேர்ந்தவர் உரிய ஆவணங்களுடன் இந்தியாவுக்கு வந்திருந்தாலும், எவ்வித முன்னறிவிப்பு நோட்டீஸும் இன்றி அவரை வெளியேற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தார். கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் அப்பெண் இந்தியாவில் தங்கியுள்ளார். அவர்களுக்கு இரு மகன்களும் உள்ளனர். அப்பெண் விசா உள்ளிட்ட உரிய பயண ஆவணங்களுடன் இந்தியாவில் தங்கியிருந்த நிலையில், பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி, அந்த பெண் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனை எதிர்த்து அவரது கணவர் சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி ஏ.ஜே.பம்பானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், உரிய ஆவணங்களுடன் வெளிநாட்டவர் நமது நாட்டில் தங்கியிருந்தாலும், அவரை வெளியேற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு. ஏனெனில் இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒரு நீதிபதி அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இப்போது, அப்பெண் நாட்டில் இருந்து வெளியேற 14 நாள்கள் அவகாசம் அளிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அப்பெண்ணின் கணவர் மேல்முறையீடு செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com