தென்னிந்தியாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்திய மோடி அரசு

தென்னிந்தியாவை மிகவும் பாரபட்சத்துடன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடத்தியது. இதன் காரணமாக பாஜக ஆட்சியை அகற்றுவதில் தென்னிந்தியா
தென்னிந்தியாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்திய மோடி அரசு


தென்னிந்தியாவை மிகவும் பாரபட்சத்துடன், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடத்தியது. இதன் காரணமாக பாஜக ஆட்சியை அகற்றுவதில் தென்னிந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கூறியுள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
சுதந்திர இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக மிகவும் மோசமாக செயல்பட்டது இப்போதைய பாஜக அரசு. முக்கியமாக மோடி தலைமையிலான அரசு தென்னிந்தியாவை மிகவும் பாரபட்சத்துடன் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகியது. எனவே, இப்போதைய மத்திய அரசை வீட்டுக்கு அனுப்புவதில் தென்னிந்திய மாநிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.
நமது நாடு பல்வேறு கலாசாரம், மொழி, இனங்களைக் கொண்ட கூட்டமைப்பாகும். இதில் அனைத்து கலாசாரத்துக்கும் உரிய மதிப்பும், அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் தேச ஒருமைப்பாட்டை கட்டிக்காக்க முடியும். நமது கலாசாரம் பாதிக்கப்படுகிறது என்று ஒருவர் உணர்ந்தால் கூட, அது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான செயல்தான். ஆனால், மாட்டிறைச்சியை தடை செய்தது, பிற மொழி பேசும் மாநில மக்கள் மீது ஹிந்தியை கட்டாயமாகத் திணித்து அதனை தேசிய மொழியாக்க முயற்சித்தது போன்ற நடவடிக்கைகள் மூலம் கூட்டாட்சி தத்துவத்தை பாஜக அரசு சீர்குலைத்தது.
பொருளாதாரம் தொடர்பான நிதிப்பங்கீடு விஷயத்தில் கூட தென்னிந்திய மாநிலங்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டது. இத்தனைக்கும் மத்திய அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தருவதில் தென்னிந்திய மாநிலங்கள்தான் முன்னிலை வகிக்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில் தென்னிந்திய மாநிலமான கேரளத்தில் போட்டியிடுவது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்தது மிகச்சிறப்பானது. இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படாது என்ற உறுதிமொழி மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். பிரதமர் பதவிக்கான போட்டியில் ராகுல் காந்திதான் இப்போது முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவாகும் நிலையில், கட்சியின் தலைவர் என்ற முறையில் அவர்தான் பிரதமர் பதவியை ஏற்பார். கூட்டணி ஆட்சி அமைந்தால், அனைத்துக் கட்சிகளும் ஆலோசித்து பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் என்றார் சசி தரூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com