தேசப் பாதுகாப்பு, பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது மத்திய அரசு: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

தேசப் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் மத்திய அரசு சீரழித்துவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
தேசப் பாதுகாப்பு, பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது மத்திய அரசு: சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு


தேசப் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் மத்திய அரசு சீரழித்துவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தொடர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
கடந்த 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து நமது நாடு அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்து வருகிறது. முக்கியமாக தேசப் பாதுகாப்பு விஷயத்தில் இந்த அரசின் செயல்பாடுகள் மிகவும் மோசம். நாட்டின் பொருளாதாரத்தையும் இந்த அரசு சீரழித்துவிட்டது. இதில் இருந்து பாஜக தப்ப முடியாது. அதற்கான விலையை தேர்தலில் கொடுத்தே ஆக வேண்டும்.
நாட்டில் இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை பிரச்னை அதிகரித்துவிட்டது. பெரும் தொழிலதிபர்கள் மட்டும் பல ஆயிரம் கோடிகள் லாபம் சம்பாதிக்கும் வகையில் மத்திய அரசு அவர்களுடன் இணக்கமாக செயல்படுகிறது. மோடி அரசு பதவியேற்ற பிறகு பெரும் தொழிலதிபர்களின் ரூ.5.5 லட்சம் கோடி வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்துவிடுவோம் என்றும் பயங்கரவாதத்துக்கு நிதி செல்வது தடுக்கப்படும் என்றும் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின்போது மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இப்போது வரை நமது ராணுவ வீரர்கள் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பலியாகி வருகின்றனர். நக்ஸல் பயங்கரவாதிகளும் தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபடுகின்றனர். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் பயன் என்ன என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் கடந்த 5 ஆண்டுகளில் பயங்கரவாத நிகழ்வுகள் 176 சதவீதம் அதிகரித்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவது இரு மடங்கும் அதிகமாகியுள்ளது. இதற்கு மத்திய அரசின் பதில் என்ன?.
வெளிநாட்டில் இருந்து கருப்புப் பணத்தை மீட்டு வந்து மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவதாக மோடி கூறியிருந்தார். கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தில் எவ்வளவு தொகையை மத்திய அரசு மீட்டது என்ற விவரத்தை தெரிவிக்க முடியுமா? அனைத்து நிலைகளிலும் முற்றிலும் தோல்வியடைந்துவிட்ட பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு இந்தத் தேர்தலில் முடிவுரை எழுதப்படுகிறது என்று யெச்சூரி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com