மோடியைக் கொல்ல சதி: எதிர்க்கட்சிகள் அமைதியாக இருப்பது ஏன்?: பாஜக கேள்வி

பிரதமர் நரேந்திர மோடியைக் கொலைச் செய்ய சதி செய்யும் வகையில், வாராணசி தொகுதியில் சமாஜவாதி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் பிஎஸ்எஃப் வீரர் தேஜ் பகதூர் யாதவ் பேசுவதாக விடியோ
மோடியைக் கொல்ல சதி: எதிர்க்கட்சிகள் அமைதியாக இருப்பது ஏன்?: பாஜக கேள்வி


பிரதமர் நரேந்திர மோடியைக் கொலைச் செய்ய சதி செய்யும் வகையில், வாராணசி தொகுதியில் சமாஜவாதி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் பிஎஸ்எஃப் வீரர் தேஜ் பகதூர் யாதவ் பேசுவதாக விடியோ வெளியான விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமைதியாக இருப்பது ஏன் என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமர் மோடியைக் கொல்வதற்காக, தேஜ் பகதூர் யாதவ் பேரம் பேசுவது போன்ற விடியோ ஊடகங்களில் திங்கள்கிழமை வெளியாகின. 
அந்த விடியோவில், பிரதமர் மோடியைக் கொல்வதற்கு ரூ.50 கோடியை அவர் கேட்பது போலவும், தனக்கு ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறுவது போல் உள்ளது. ஆனால், அந்த விடியோவின் உண்மைத்தன்மைக்கு ஊடகங்கள் உறுதியளிக்கவில்லை.
இந்தநிலையில், இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை கொல்வதற்கு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான விஷயம். ஆனால் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது ஏன்?  அவர்களும் தேஜ் பகதூர் யாதவ் பேசியதை ஒப்புக்கொள்கிறார்களா? 
பிரதமரை கொல்ல சதி திட்டம் தீட்டியவரை வேட்பாளராக அறிவித்ததற்காக சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் மன்னிப்பு கேட்பார்களா? 
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பல நாள்களுக்கு குரல் கொடுத்தன. ஆனால் தற்போது பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமைதியாக இருக்கின்றன என்று கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி மக்களவைத் தொகுதியில் மோடிக்கு எதிராக சமாஜவாதி சார்பில் களமிறக்கப்பட்டவர் தேஜ் பகதூர் யாதவ். இவர் எல்லைப் பாதுகாப்பு படையில்(பிஎஸ்எஃப்) இருந்து கடந்த 2017-ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டவர். 
பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறி இவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com