விடுதி அறைக்குள் வாக்குப்பதிவு இயந்திரம்: தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ்

பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் 5ஆம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றபோது,  சீலிடப்பட்ட 6 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுதி அறைக்குள் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக


பிகார் மாநிலம், முசாஃபர்பூர் மாவட்டத்தில் 5ஆம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றபோது,  சீலிடப்பட்ட 6 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுதி அறைக்குள் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
இருப்பினும், அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திறக்கப்படவோ அல்லது சீல் உடைக்கப்படவோ இல்லை என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 
கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற 5ஆம் கட்ட வாக்குப்பதிவுக்காக வைக்கப்பட்டிருந்த  6 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை, அங்குள்ள தங்கும் விடுதிக்குள் சிலர் எடுத்து சென்றதை மகா கூட்டணியைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக, மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அலோக் ரஞ்சன் கோஷுக்கு உடனடியாக தகவல் அளித்தனர். 
இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை விடுதிக்குள் கொண்டு சென்றதற்காக, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியான அவதேஷ் குமாரிடம் விளக்கம் அளிக்கக் கோரி, தேர்தல் அதிகாரி அலோக் ரஞ்சன் கோஷ் நோட்டீஸ் அளித்தார். 
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதற்கான அறையில் அல்லது வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடியில் மட்டுமே பாதுகாப்புடன் வைக்க வேண்டும். ஆனால், விதிமுறையை மீறி விடுதி அறைக்கு கொண்டு சென்றதற்காக அவதேஷ் குமாருக்கும், அதற்கு உதவி செய்த 5 போலீஸார் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் அதிகாரி அலோக் ரஞ்சன் கோஷ் தெரிவித்தார். 
 விடுதி அறைக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்டவை அல்ல என்றும், அவை, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தால் அதற்கு மாற்றாக பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தவை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதுகுறித்து  மகா கூட்டணி தலைவர்கள் கூறுகையில்,பிகாரில் தற்போது ஆளுங்கட்சியாக இருந்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர், உள்ளூர் அரசு அதிகாரிகளையும்,  தங்கள் ஆட்சி அதிகாரத்தையும் பயன்படுத்தி தேர்தல் முறைகேடில் ஈடுபட்டு எப்படியாவது வெற்றிப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று குற்றம் சாட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com