சுடச்சுட

  

  ஐஎன்எஸ் விராட் போர் கப்பலை பயன்படுத்தினாரா ராஜீவ் காந்தி? மோடியின் பேச்சால் வெடிக்கும் சர்ச்சை

  By DIN  |   Published on : 09th May 2019 07:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rajiv-gandhi


  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஐஎன்எஸ் விராட் போர் கப்பலை சொந்த காரணத்துக்காக பயன்படுத்தியதாக பிரதமர் மோடி பேசியது மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. 

  தில்லியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, வரலாற்றுப் புகழ் பெற்ற ராம்லீலா மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி விடுமுறையை கழிக்க இத்தாலி உறவினர்களுக்காக இந்திய கடற்படையின் ஐஎனஎஸ் விராட் போர் கப்பலை பயன்படுத்தியதாக தெரிவித்தார். இந்தியாவின் பாதுகாப்பில் ராஜீவ் காந்தி சமரசம் செய்துகொண்டதாக பிரதமர் மோடி விமரிசித்தார். 

  பிரதமர் மோடியின் இந்த பேச்சு மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. 

  இந்த நிலையில், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "இந்த தகவல் பொய்யானது என்று ஓய்வுபெற்ற கடற்படை உயரதிகாரி வினோத் பஸ்ரிச்சா தொலைக்காட்சிகளுக்கு தெரிவித்துள்ளார். அது விடுமுறை காலம் அல்ல. ராஜீவ் காந்தி அலுவல் பணிக்காக தான் பயன்படுத்தினார். மோடிக்கு உண்மை தகவல் குறித்து கவலை இல்லை" என்றார். 

  அதேசமயம், பிரதமர் மோடியின் பேச்சை ஆதரித்து ஓய்வுபெற்ற கடற்படை கமாண்டர் விகே. ஜேட்லி டிவீட் செய்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவிக்கையில், 

  "ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி தங்களது விடுமுறையை கொண்டாடுவதற்காக பங்காரம் தீவில் ஐஎன்எஸ் விராட் போர் கப்பலை பயன்படுத்தினர். இந்திய கடற்படை பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. அதற்கு நான் சாட்சி. ஐஎன்எஸ் விராட் போர் கப்பலில் அப்போது நான் தான் பணியமர்த்தப்பட்டேன்" என்றார். 

  ராஜீவ் காந்தி குறித்த பிரதமர் மோடியின் இந்த விமரிசனத்துக்கு ஒருபுறம் ஆதரவு குரல் எழுந்தாலும், மறுபுறம் அது பொய்யான தகவல் என்றும் மறுக்கப்பட்டு வருகிறது.

  பிரதமர் மோடி ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், "ஊழலில் முதன்மையானவர் ராஜீவ் காந்தி என்று தான் அவருடைய வாழ்க்கை முடிவுற்றது" என்று விமரிசனம் செய்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai