சுடச்சுட

  

  குடும்ப அரசியலின் தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படுகின்றனர்: பிரதமர் மோடி தாக்கு

  By DIN  |   Published on : 09th May 2019 10:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi5

  குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்கள் தங்களது முன்னோர்களின் பெயரில் வாக்கு சேகரிக்கின்றனர். ஆனால், அந்த முன்னோர்கள் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டினால் அவர்கள் கோபப்படுகின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 
  தில்லியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, வரலாற்றுப் புகழ் பெற்ற ராம்லீலா மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் மனோஜ் திவாரி, கௌதம் கம்பீர், ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட தில்லி பாஜக வேட்பாளர்கள், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் விஜய் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
  பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: 
  வாரிசு அரசியலின் நான்காவது தலைமுறையை நாங்கள் எதிர்கொள்கிறோம். இந்த வாரிசு அரசியல் இந்தியாவில் ஒரு குடும்பத்தில் மட்டும் இல்லை. அந்தக்
  குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த பல குடும்பங்கள் இன்று வாரிசு அரசியலில் கொடி கட்டிப் பறக்கின்றன. தில்லியில் தீட்சித் குடும்பம், ஹரியாணாவில் ஹூடா குடும்பம், பஞ்சாபில் பியான்ட் சிங் குடும்பம், ராஜஸ்தானில் கெலாட், பைலட் குடும்பம், மத்தியப் பிரதேசத்தில் சிந்தியா, கமல்நாத், திக்விஜய் சிங் குடும்பங்கள் ஆகியன வாரிசு அரசியலில் கொடி கட்டிப் பறக்கின்றன. இந்தக் குடும்பங்கள் அனைத்துமே அந்தப் பெரிய குடும்பத்துடன் நெருக்கத்தைப் பேணியவை. 
  இந்தக் குடும்ப அரசியலில் ஈடுபட்டவர்கள் நமது ராணுவத்தைக் கேவலப்படுத்தினர். விமானப்படையை  தங்களது சொந்த சொத்தாகப் பயன்படுத்திய குடும்பம் தொடர்பாக மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தனது இத்தாலி உறவினர்களை விடுமுறைக்கு இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விராட் போர் கப்பலில் அழைத்துச் சென்றார். குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்கள் தங்களது முன்னோர்களின் பெயரில் வாக்கு சேகரிக்கின்றனர்.
  ஆனால், அந்த முன்னோர்கள் செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டினால், அவர்கள் கோபப்படுகின்றனர். 
  பயங்கரவாதத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் தொடர்பாக தற்போதைய நாட்டு மக்கள் அறிந்து வைத்துள்ளனர். பயங்கரவாதத்தின் வேர் எங்கிருந்தாலும் அங்கு
  தேடிச் சென்று நமது படையினர் அழிப்பார்கள் என்பதையும் மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். தில்லியிலும் அதன் அண்டை மாநிலங்களிலும் நடைபெற்ற
  சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு காங்கிரஸ் கட்சிதான் பதில் சொல்ல வேண்டும். 
  முதல் முறையாக இந்த ஆட்சியில்தான் அந்தக் கலவரத்துக்குக் காரணமானவர்கள் நீதிக்கு முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
  அந்தக் கலவரத்தை திட்டமிட்டு நடத்தியவர்களை 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீதியின் கரங்கள் இப்போதுதான் தண்டித்துள்ளன. முதல் முறையாக அவர்கள்
  சிறைச்சாலைக்கும், தூக்குக் கயிற்றுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். 
   தில்லியில் முட்டுக்கட்டை அரசியல்: புது விதமான அரசியலைக் கொண்டுவருவதாகக் கூறி, தில்லி மக்களை சிலர் முட்டாளாக்கிவிட்டனர். இதனால், முட்டுக்கட்டை அரசியல், அராஜக அரசியலுக்கு தில்லி மக்கள் பலியாகியுள்ளனர். 
  மோசமான வார்த்தைகளும், நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்வதும் அவர்களின் அடையாளமாகிவிட்டன. தில்லியில் மத்திய அரசு கொண்டுவரும்
  அனைத்து மக்கள் நலப் பணிகளுக்கும் அவர்கள் (ஆம் ஆத்மி) முட்டுக்கட்டை போடுகின்றனர். 
  அவர்கள், தில்லியில் மக்கள் நலப் பணிகளுக்கு மட்டுமல்ல, தேசத்தை உடைக்க நினைக்கும் சக்திகளுடனும் நல்லுறவு பேணி தேசப் பாதுகாப்புக்கு
  முட்டுக்கட்டை போடுகின்றனர். 
  தில்லியில் வாழும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை இலகுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். குறைந்த விலையில் வீடுகள் கிடைக்கும் திட்டம்
  அறிமுகப்படுத்தப்பட்டது என்றார் பிரதமர் மோடி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai