சுடச்சுட

  

  தேஜ் பகதூரின் கோரிக்கைகளைப் பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

  By DIN  |   Published on : 09th May 2019 10:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supreme court

  உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகக் களமிறங்கிய சமாஜவாதி வேட்பாளரும், எல்லைப் பாதுகாப்புப் படை(பிஎஸ்எஃப்) முன்னாள் வீரருமான தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில், அவரது கோரிக்கைகளைப் பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  வாராணசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக சுயேச்சையாகப் போட்டியிட பிஎஸ்எஃப் முன்னாள் வீரர் தேஜ் பகதூர் யாதவ் வேட்புமனு தாக்கல் செய்தார். எனினும், அவரைத் தங்கள் கட்சி வேட்பாளராக சமாஜவாதி அறிவித்தது. அதையடுத்து சமாஜவாதி சின்னத்தில் போட்டியிடுவதற்காக, மற்றொரு வேட்புமனுவை தேஜ் பகதூர் தாக்கல் செய்தார்.
  இந்நிலையில், இரண்டு வேட்புமனுக்களிலும் உள்ள தகவல்களில் வேறுபாடு இருப்பதாகவும், லஞ்சம் அல்லது நம்பிக்கையின்மை காரணமாகப் பணிநீக்கம்
  செய்யப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர்கள் 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறியும் அவரது வேட்பு மனுவை வாராணசி தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி கடந்த 1-ஆம் தேதி நிராகரித்தார்.
  தேர்தல் நடத்தும் அதிகாரியின் இந்த முடிவுக்கு எதிராக தேஜ் பகதூர் யாதவ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தேர்தல் ஆணையம், பாரபட்சத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளது. ஒழுங்கீன நடவடிக்கை காரணமாகவே நான் (தேஜ் பகதூர் யாதவ்) பணி நீக்கம் செய்யப்பட்டேன். ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர், தேர்தலில் போட்டியிட முடியாது என்று தேர்தல் விதிகளில் கூறப்படவில்லை. அதனால் தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்து செய்து என்னைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
  இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கைகளைத் தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும். இது தொடர்பான விவரங்களை வியாழக்கிழமைக்குள் (மே 9) உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
  எல்லைப் பாதுகாப்புப் படையில் வீரர்களுக்குத் தரமான உணவு வழங்கப்படுவதில்லை என்று காணொலி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய தேஜ் பகதூர் யாதவ், பிஎஸ்எஃப் படையில் இருந்து கடந்த 2017-ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார்.
  அவர், சுயேச்சையாகப் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவில் பணி நீக்கம் பற்றி கூறியுள்ளதாகவும், சமாஜவாதி சார்பில் தாக்கல் செய்த வேட்புமனுவில்
  பணி நீக்கம் செய்யப்பட்ட தகவல்களை அளிக்கவில்லை என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். 
  அதற்கு தேஜ் பகதூர் தரப்பிலிருந்து விளக்கமும், ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. 
  எனினும், அவரது வேட்புமனுவைத் தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai