சுடச்சுட

  

  தேர்தலுக்கான போட்டியை கைவிட்டது காங்கிரஸ்:  பிரதமர் நரேந்திர மோடி

  By ஃபதேபாத்/ குருக்ஷேத்ரா (ஹரியாணா),  |   Published on : 09th May 2019 10:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi4

  மக்களவைத் தேர்தலுக்கான போட்டியை காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கைவிட்டு விட்டன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
  ஹரியாணா மாநிலம், ஃபதேபாத், குருக்ஷேத்ரா ஆகிய இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டங்களில் அவர் பேசியதாவது:
  மக்களின் ஆசிர்வாதத்தால் கடந்த 2014-இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்தது. கடந்த 5 ஆண்டுகளில் உலக அரங்கில்
  இந்தியாவின் நன்மதிப்பு அதிகரித்துள்ளது.
  மக்களவைத் தேர்தலுக்கான 5 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த பிறகு கள நிலவரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிந்து கொண்டு விட்டன.
  மக்களின் ஆசியுடன் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரவுள்ளது. வரும் 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும். இதையறிந்ததால், தேர்தல் போட்டியை காங்கிரஸும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கைவிட்டு விட்டன.
  கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு பாகிஸ்தான் அடிக்கடி எல்லையில் அத்துமீறி நமது ராணுவம் மீது தாக்குதல் நடத்தும். பயங்கரவாதத் தாக்குதல்களையும் நிகழ்த்தும். அப்போதெல்லாம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி வெறும் கண்டன அறிக்கைகளை மட்டுமே வெளியிடும்.
  ஆனால், எனது தலைமையிலான அரசு, ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது. இதனால், பாகிஸ்தானில் எதிரிகளின் முகாமுக்கே சென்று நமது ராணுவ வீரர்கள் தாக்கி அழிக்கிறார்கள். ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்ததற்கான பெருமை எனது அரசையே சாரும்.
  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறு ஆய்வு செய்ய இருப்பதாகவும், தேச விரோதச் சட்டத்தை ரத்து செய்வதாகவும்
  வாக்குறுதி அளித்துள்ளது. இதிலிருந்து பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களும், கல் வீச்சு தாக்குதலில் ஈடுபடுபவர்களும் சுதந்திரமாக உலவ வேண்டும் என்று
  வெளிப்படையாகவே காங்கிரஸ் கட்சி பேசுவதாக உள்ளது.
  நமது தேசத்தையும், தேசியக் கொடியையும் அவமதிக்கும் கும்பல்கள், நக்ஸல்களின் ஆதரவாளர்கள் சுதந்திரமாகத் திரிய வேண்டும் என்று காங்கிரஸ்
  விரும்புகிறது.
  கடந்த 1984-இல் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்தில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதைய பாஜக கூட்டணி அரசுதான் நீதி வழங்கியது. அந்த வன்முறையில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் ஒருவருக்கு (கமல்நாத்), முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 
  இவ்வாறு செய்ததன் மூலம், கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வேதனை குறித்து தங்களுக்கு கவலை இல்லை என்பதை காங்கிரஸ் உணர்த்தி விட்டது.
  தில்லியிலும், ஹரியாணாவிலும் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுகள், விவசாயிகளின் நிலத்தை மிகவும் சொற்பமான விலைக்கு அபகரித்து,
  ஊழலை சாகுபடி செய்து வந்தன.
  மக்களின் ஆசியால் நான் ஆட்சிக்கு வந்த பிறகு,  விவசாயிகளிடம் இருந்து கொள்ளை அடித்தவர்களை நீதிமன்றங்களுக்கு இழுத்து வந்தேன். அவர்கள்,
  ஜாமீனுக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள்; விசாரணைக்காக, அமலாக்கத் துறை அலுவலகங்களுக்குச் சென்று வருகிறார்கள். நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்துடன் இருந்த அவர்கள், தற்போது வெப்பத்தை உணரத் தொடங்கியுள்ளனர்.
  ஊழல்வாதிகளை சிறைச்சாலையின் கதவு வரை அழைத்து வந்து விட்டேன். மக்களாகிய உங்களின் ஆசி எனக்கு மீண்டும் கிடைத்தால், அடுத்த 5 ஆண்டுகளில் அவர்களை சிறைக்குள் அனுப்பி  விடுவேன்.
  தாயாரையும் விமர்சிக்கிறார்கள்: காங்கிரஸ் தலைவர்கள் என் மீது அன்பு செலுத்துவதாகக் கூறிக் கொண்டு, என்னைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.  மேலும், எனது தாய், தந்தையரைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. (முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை மோடி விமர்சித்தாலும், அவர் மீது தொடர்ந்து அன்பு செலுத்துவதாக ராகுல் காந்தி கூறியதைக் குறிப்பிடுகிறார்).
  காங்கிரஸின் ஊழல்களை தடுத்தேன்; அவர்கள் ஆட்சிக்கு வருவதைத் தடுத்தேன். இந்த காரணங்களுக்காக, காங்கிரஸ் தலைவர்கள் என் மீது அன்பு
  காட்டுவதாகக் கூறிக் கொண்டே கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
  அக்கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் என்னை பூச்சி என்றார்; மற்றொருவர் பத்மாசூரன் என்றார். வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த இன்னொரு காங்கிரஸ் தலைவர், என்னை குரங்கு என்று விமர்சித்தார். 
  இன்னொரு அமைச்சர் தாவூத் இப்ராஹிம் என்றார். மேலும், ஹிட்லர், முசோலினி என்றெல்லாம் என்னை விமர்சித்தனர்.
  என்னை மட்டுமன்றி எனது தந்தை, தாயாரையும் கூட அவர்கள் விமர்சித்தனர். நான் பிரதமரான பிறகுதான், காங்கிரஸ் கட்சியினர் என்னை விமர்சிக்கிறார்கள்.
  என்னை துண்டு துண்டாக வெட்டுவதாக கூறிய காங்கிரஸ் தலைவர்களுக்கு அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. மேலும், அவ்வாறு பேசியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி, அவர்களை ஆதரித்தது காங்கிரஸ்.
  பொதுமேடையில் நான் இவ்வாறு பேசுவது சரியல்ல. பள்ளி செல்லும் குழந்தைகளும், கல்லூரி மாணவர்களும் நான் பேசுவதை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். 
  அவர்கள் காங்கிரஸ் தலைவர்களின் பாஷையைக் கற்றுக் கொள்ளவோ அல்லது பேசவோ கூடாது என்றார் மோடி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai