சுடச்சுட

  

  மதுரை மக்களவைத் தொகுதி: தேர்தலை ரத்து செய்யக் கோரி சுயேச்சை வேட்பாளர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

  By DIN  |   Published on : 09th May 2019 11:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்யக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அத்தொகுதி சுயேச்சை வேட்பாளரும், வழக்குரைஞருமான கே.கே. ரமேஷ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 
  அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த விவகாரத்தில் முதல் விசாரணையின் போதே எனது ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை.
  எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அளிக்கவும் உத்தரவிடவில்லை. பணத்தைப் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்கு செலுத்துவதை தரம் தாழ்ந்த செயல் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. 
  காணொலி, புகைப்பட ஆதாரங்களைப் பரிசீலிக்கவும் நீதிமன்றம் தவறிவிட்டது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி பணியமர்த்தப்பட்ட பறக்கும்படையினர் வாக்குக்காக பணப்பட்டுவாடா செய்யப்பட்டதை தடுப்பதில் தோல்வியடைந்தனர். வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த
  பெருமளவு பணம் கைப்பற்றப்பட்டதால்,  வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதையும் சென்னை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. 
  வேலூரைப் போல மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. எனவே, மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. 
  இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக வழக்குரைஞர் ஜெய சுகின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் புதன்கிழமை முறையிட்டார். அப்போது, உரிய மனுவை சமர்பிக்குமாறு தலைமை நீதிபதி தெரிவித்தார்.  
  பின்னணி: மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக, திமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், அந்தத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் அந்தத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 
  இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் 15-இல்  விசாரணைக்கு வந்தபோது தேர்தல் ஆணையம், பணப்பட்டுவாடாவைத் தடுக்க மதுரை தொகுதி மட்டுமன்றி, அனைத்துத் தொகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
  மேலும், தேர்தல் பறக்கும்படையினர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai