அயோத்தி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

மத்தியஸ்தர் குழு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகார வழக்கை உச்சநீதிமன்றம் நாளை (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது.  
அயோத்தி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை


மத்தியஸ்தர் குழு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ததையடுத்து அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகார வழக்கை உச்சநீதிமன்றம் நாளை (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது.  

அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 8-ஆம் தேதி நியமித்தது. ஆன்மிக குருவும், வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த மத்தியஸ்தர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த மத்தியஸ்தர் குழு ஒரு வாரத்தில் தனது பேச்சுவார்த்தைப் பணிகளைத் தொடங்கும் என்றும், தங்களுடைய மத்தியஸ்த முயற்சி எந்த அளவுக்கு உள்ளது என்பது தொடர்பான அறிக்கையை 4 வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மத்தியஸ்த பணிகள் அனைத்தும் முழுவதும் கேமராவில் பதிவு செய்யப்பட வேண்டும். 8 வாரங்களில் பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. 

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மத்தியஸ்தர் குழு கடந்த 6-ஆம் தேதி இடைக்கால அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளையை (வெள்ளிக்கிழமை) தேதியில் பட்டியலிட்டுள்ளது.  

முன்னதாக, அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை, சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய தரப்புகள் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-இல் தீர்ப்பளித்தது. 
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com