பானி புயல்: ஒடிஸாவில் பலி எண்ணிக்கை 41-ஆக அதிகரிப்பு

ஒடிஸாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய பானி புயலால் பலியானோரின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது.
பானி புயல்: ஒடிஸாவில் பலி எண்ணிக்கை 41-ஆக அதிகரிப்பு

ஒடிஸாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய பானி புயலால் பலியானோரின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகி, அதிதீவிர புயலாக உருமாறிய பானி புயல், ஒடிஸா மாநிலத்தில் கடந்த 3-ஆம் தேதி கரையைக் கடந்தது. இதனால், பல கட்டடங்களும், மின்சாரக் கம்பங்களும் சேதமடைந்தன. 
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகள் குறித்து மாநில அதிகாரி ஒருவர் புதன்கிழமை
கூறியதாவது:
புயல் காரணமாக உயிரிழந்த மேலும் 4 பேரின் உடல்கள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம், புயலால் பலியானோரின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. புயலால் சேதமடைந்த பகுதிகளில் உள்ள மக்களுக்குக் குடிநீர் கிடைப்பதைத் தொடர்ந்து உறுதி செய்துவருகிறோம். மின்இணைப்பு
துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில், அதைச் சரிசெய்யும் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
மின்இணைப்பு துண்டிக்கப்பட்ட 80 சதவீதப் பகுதிகள் 10-ஆம் தேதிக்குள் சரிசெய்யப்பட்டுவிடும். புவனேசுவரத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் வரும் 12-ஆம் தேதிக்குள் மின்இணைப்பு சரிசெய்யப்பட்டுவிடும்.
மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ளும்பொருட்டு, அண்டை மாநிலங்களான தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்டவற்றில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com