மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் 

பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்; எனவே, அவர் மீண்டும் பிரதமராக மாட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்
மோடி மீண்டும் பிரதமராக மாட்டார் 

பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்; எனவே, அவர் மீண்டும் பிரதமராக மாட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். மத்தியப் பிரதேச மாநிலம், மொரீனா, பிந்த், குவாலியர் ஆகிய இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று அவர் பேசியதாவது:
கடந்த மக்களவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. இந்த உண்மையை அவரால் எதிர்கொள்ள
முடியவில்லை. இப்போது மோடி என்ன கூறினாலும், அதை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. எனவே, அவர் மீண்டும் பிரதமராக மாட்டார். மக்களவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்பதை உணர்ந்துகொண்டதால், ஒருவித பதற்றத்துடன் அவர் காணப்படுகிறார்.
பணமதிப்பிழப்பு, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம் ஆகிய மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளால், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோய்விட்டன. ஊழல்வாதிகள், தங்களுடைய கருப்புப் பணத்தை மாற்றிக் கொள்ளவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை பயன்பட்டது. பிரதமர் மோடியின் ஆசியுடன் அனைத்து திருடர்களும் தங்களது கருப்புப் பணத்தை மாற்றிக் கொண்டனர்.
மோடி தலைமையிலான அரசு, நாட்டிலுள்ள 15 தொழிலதிபர்களின் ரூ.5.55 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்தது. அதேசமயம், விவசாயிகள்,
இளைஞர்களின் நலனை முழுமையாக புறக்கணித்துவிட்டனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பயிர்க்கடனை திருப்பிச் செலுத்த முடியாத
விவசாயிகள் சிறைக்கு செல்வதை தடுக்க சட்டம் இயற்றுவோம். பிரதமர் மோடி, அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்கிறார்; தொழிலதிபர்களை சந்தித்து, ஆரத் தழுவுகிறார். சாதாரண மக்களின் நலன் குறித்து அவர் எதுவும் பேசுவதில்லை. ஆனால், நான் எப்போதும் ஏழைகளின் பக்கமே நிற்பேன்.
ரஃபேல் விவகாரம்: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் பிரதமர் நரேந்திர மோடியும் தனியாக
பேச்சுவார்த்தை நடத்தியது, இந்திய விமானப் படை அதிகாரிகளின் கடிதம் மூலம் அம்பலமானது. இத்தகைய செயலில் ஈடுபட்டது ஏன் என்று அவர் நாட்டு
மக்களிடம் விளக்கமளிக்க வேண்டும். சட்டத்தின் பிடியிலிருந்து அவர் தப்பிக்க முடியாது.
நாட்டின் காவலாளியே திருடன் என்ற கோஷத்தை நானோ, காங்கிரஸ் கட்சியோ தொடங்கிவைக்கவில்லை. அது, நமது இளைஞர்கள், தொழிலாளர்களின் கோஷமாகும். சத்தீஸ்கரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் நான் பேசிக் கொண்டிருந்தபோது,  நமது நாட்டின் காவலாளி (மோடி), இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்குவேன்; நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என வாக்குறுதி அளித்திருந்தார் என்று கூறினேன்.  அப்போது, அக்கூட்டத்திலிருந்த இளைஞர்கள், திருடன் என்ற கோஷத்தை எழுப்பினர். எனவே, நாட்டின் காவலாளியே திருடன் என்பது இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் கோஷமாகும்.
மோடியின் பெயர் அம்பலமாகும்: மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். அப்போது, மோடி, அனில் அம்பானி ஆகியோரின் பெயர்கள் அம்பலமாகும். இந்த விவகாரத்தில் உண்மைகள் வெளிவரும்போது, மோடியால் இந்த நாட்டு மக்களை எதிர்கொள்ள முடியாது.
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன் என்றார் ராகுல்.  இதனிடையே சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.72,000 அளிக்கும் காங்கிரஸின் நியாய் திட்டம், வறுமை எனும் தடைக்கல்லை உடைக்கும்; ஏழை மக்களின் வாழ்வை மாற்றும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com