சுடச்சுட

  

  அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கிறார் மம்தா: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 10th May 2019 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  மேற்கு வங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பளித்த பாஜக நிர்வாகிகள்.


  நாட்டின் பிரதமராக என்னை ஏற்க மறுப்பதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவமதித்து வருகிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
  மேற்கு வங்கத்தின் பங்குரா மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
  நாட்டின் பிரதமரை அரசாங்கத்தின் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று வெளிப்படையாகவே மம்தா பானர்ஜி கூறிவருகிறார். ஆனால், பாகிஸ்தானின் பிரதமரை நாட்டின் பிரதமராக ஏற்றுக்கொள்வதில் அவர் பெருமிதம் கொள்கிறார். மக்களவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில், நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை மம்தா அவமதித்து வருகிறார்.
  மாநில நலனில் அக்கறையில்லை: பானி புயலால் மேற்கு வங்க மாநிலம் பாதிக்கப்பட்டிருந்தபோது கூட என்னுடைய தொலைபேசி அழைப்பை அவர் ஏற்க மறுத்துவிட்டார். மாநில அதிகாரிகளுடன் புயல் சீரமைப்புப் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்காகவே அவரை நான் தொலைபேசி வாயிலாக அழைத்தேன். ஆனால், அதுபோன்ற கூட்டம் நடைபெற மம்தா அனுமதிக்கவில்லை. மாநிலத்தின் நலனை அவர் முக்கியமெனக் கருதவில்லை. அவருடைய குடும்பநலன் குறித்தும், உறவினர்களின் நலன் குறித்தும், கட்சிக்காரர்களின் நலன் குறித்தும் மட்டுமே அவர் சிந்தித்து வருகிறார்.
  மம்தா பயன்படுத்தும் வார்த்தைகளில் இருந்தே, அவர் எந்த அளவுக்கு தோல்வி பயத்தில் உள்ளார் என்பது தெரிகிறது. என் மீது பொய்யான விமர்சனங்களை அவர் முன்வைத்து வருகிறார். விமர்சனங்கள் எனக்குப் பழகிவிட்டன. உலகில் உள்ள எந்த மொழியில் விமர்சனம் செய்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனவலிமை எனக்குக் கிடைத்துவிட்டது.
  கொள்ளையர்கள் ஆட்சி: ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஆவலில், மாநில உரிமையை மம்தா அழித்துவருகிறார். வெறும் பெயருக்கு மட்டுமே மாநிலத்தை திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி செய்துவருகிறது. உண்மையில், அந்தக் கட்சியில் உள்ள கொள்ளையர்களே மாநிலத்தை ஆட்சிசெய்து வருகின்றனர். இதனால், மாநிலத்தில் உள்ள தொழிலதிபர்கள், ஆசிரியர்கள், ஏழை மக்கள் உள்ளிட்ட அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  மாநிலத்தில் உள்ள ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் உணவுப் பொருள்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு நிதி அளித்து வருகிறது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் உள்ள கொள்ளையர்கள், அந்தப் பணத்தையும் திருடிவிடுகின்றனர். மாநிலத்திலுள்ள பெரும்பாலான சுரங்கங்கள் மூலம் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களே லாபமடைந்து வருகின்றனர். அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உரிய சம்பளம் கூட கிடைப்பதில்லை.
  மக்களின் அன்பு: திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் நடக்கும் இதுபோன்ற அநியாயங்களை நான் மக்களிடம் எடுத்துக் கூறினால், மம்தா கோபப்படுவார். அவரது கோபம் குறித்து நான் கவலைப்படவில்லை. ஏனெனில், நாட்டிலுள்ள 130 கோடி மக்களின் அன்பு எனக்கு இருக்கிறது. என்மீது கோபப்படுவதை விடுத்து, மாநிலத்தில் நிதிநிறுவனங்களால் ஏமாற்றப்பட்டவர்கள் குறித்தும், வேலை கிடைக்காமல் திண்டாடும் படித்த இளைஞர்கள் குறித்தும், உரிய சம்பளம் கிடைக்காமல் அல்லலுறும் அரசுப் பணியாளர்கள் குறித்தும் மம்தா கவலைப்பட வேண்டும்.
  மாநிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் நலன் குறித்து சிந்தித்துவரும் மம்தா, மாநிலத்திலுள்ள பழங்குடியினர் குறித்து சிறிதும் சிந்திக்கவில்லை. நமது நாட்டின் வீரர்கள், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால், அத்தாக்குதலில் இறந்தவர்களின் உடல்களைக் காண்பித்தால்தான் அதை நம்புவேன் என்று மம்தா கூறினார்.
  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஏழைகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அனைவருக்கும் 2022-ஆம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித்தரப்படும்; அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
  எதிர்க்கட்சிகள் விரக்தி: மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் நடைபெற்ற மற்றொரு பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
  மக்களவைக்கான ஐந்துகட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடும் என்பதை அறிந்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் விரக்தியடைந்துள்ளன. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் மே 23-ஆம் தேதி அன்று, மம்தா பானர்ஜிக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியானபிறகு, மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியின் முடிவுக்காலம் தொடங்கும்.
  கனிமவளங்கள் கொள்ளை: மம்தா என்னை அறைய விரும்புவதாக நான் கேள்விப்பட்டேன். மம்தா எனக்கு சகோதரி போன்றவர். அவரது ஆசையை நான் மதிக்கிறேன். அவர் அறைவது எனக்குக் கிடைக்கும் ஆசீர்வாதம் போன்றதாகும். அதேபோன்று, மாநிலத்தில் நிதிநிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களை அறையும் தைரியமும் மம்தாவுக்கு இருந்திருக்க வேண்டும். புருலியா மாவட்டம் நிலக்கரி உள்ளிட்ட கனிமவளம் நிறைந்த பகுதி. ஆனால், சட்டவிரோத கும்பல்களால் இந்தக் கனிமவளங்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.
  தன்னுடைய உறவினர்கள் நலனைக் கவனிப்பதில் மம்தா கவனம் கொண்டுள்ளார். அவருடைய அமைச்சர்களும், கட்சிக்காரர்களும் ஊழலில் ஈடுபட்டு, மாநில வளங்களைக் கொள்ளையடித்து வருகின்றனர். இப்படியிருந்தால், மாநிலத்தில் உள்ள மக்கள் எவ்வாறு முன்னேறுவார்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai