சுடச்சுட

  

  குடியுரிமை விவகாரம்: தேர்தலில் ராகுல் போட்டியிட தடை கோரிய மனு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

  By DIN  |   Published on : 10th May 2019 02:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  RAGUL


   காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரிய மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது. அவரது குடியுரிமை தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வராததால், அவரைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
  ஜெய் பகவான் கோயல், சி.பி. தியாகி ஆகிய இருவர் தாக்கல் செய்த இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏதோ ஒரு நிறுவனம் அவரது (ராகுல்) பெயரை பிரிட்டன் குடிமகன் என்று குறிப்பிட்டுவிட்டதால், அவர் அந்நாட்டு குடிமகனாகிவிட மாட்டார் என்று கூறிய நீதிபதிகள் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
  ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் அமேதி தொகுதியிலும், கேரளத்தில் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த இரு தொகுதிகளிலும் அவரது மனுவைத் தள்ளுபடி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
  முன்னதாக, கடந்த மாதம் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எந்த நாட்டுக் குடிமகன் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. பாஜக எம்.பி.யும், அக்கட்சியின் மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
  அதில், உங்கள் குடியுரிமை தொடர்பாக மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி புகார் அளித்துள்ளார். அதில், பிரிட்டனில் 2003-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தின் இயக்குநராக உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளது. உங்கள் பிறந்த தினம் 19 ஜூன் 1970 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கைகளில் நீங்கள் (ராகுல் காந்தி) பிரிட்டன் நாட்டு குடிமகன் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்திடம் விவரம் கேட்கப்பட்டபோது, அந்த நிறுவனமும் நீங்கள் பிரிட்டன் குடிமகன் என்பதை உறுதி செய்துள்ளது. இது தொடர்பான கடிதத்தை தனது புகாரில் சுப்பிரமணியன் சுவாமி இணைத்துள்ளார். எனவே இந்த விஷயத்தில் உண்மையான நிலவரம் என்ன என்பதை 15 நாள்களுக்குள் உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
  இது தொடர்பாக அப்போது கருத்துத் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எம்.பி. ஒருவர் மத்திய அமைச்சகத்துக்கு புகார்க் கடிதம் அனுப்பினால், இது தொடர்பாக முடிந்த அளவுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். இது பெரிய விஷயமல்ல. வழக்கமான நடைமுறைதான் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai