சுடச்சுட

  

  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எலிகளால் ஆபத்து: மதுரா தொகுதி ஆர்எல்டி வேட்பாளர் புகார்

  By DIN  |   Published on : 10th May 2019 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  poll

  கோப்புப் படம்


   தனது தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் எலித் தொல்லை அதிகம் இருக்கிறது என்று உத்தரப் பிரதேசத்தின் மதுரா தொகுதி ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆர்எல்டி) வேட்பாளர் நரேந்திர சிங் புகார் அளித்துள்ளார்.
  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை, செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு புகார்களை அளித்து வரும் நிலையில், ஆர்எல்டி வேட்பாளரின் இந்த நூதன புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  மதுரா தொகுதியில் பாஜக வேட்பாளரும் நடிகையுமான ஹேம மாலினியை எதிர்த்து சமாஜவாதி-பகுஜன் சமாஜ் - ஆர்எல்டி கூட்டணி சார்பில் நரேந்திர சிங் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் கடந்த மாதம் 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுராவின் மண்டி சமிதி பகுதியில் உள்ள கட்டடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் அதிகாரிகளிடம் நரேந்திர சிங் ஒரு நூதன புகார் அளித்துள்ளார். அதில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் எலிகள் அதிகம் இருப்பதால், இயந்திரங்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. எலிகள், இயந்திரத்தில் உள்ள வயர்களை கடித்து சேதப்படுத்திவிட்டால், வாக்குப் பதிவின்போது பதிவான வாக்குகளை எண்ண முடியாது. எனவே, இயந்திரங்களை உரிய முறையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
  ஆனால், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சர்வாக்ய மிஸ்ரா இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் மூன்று நாள்களுக்கு ஒருமுறை நான் ஆய்வு செய்து வருகிறேன். அந்த இடம் மிகவும் பாதுகாப்பானது. அங்கு எலிகளால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை. வேட்பாளர் அளித்துள்ள புகார் குறித்து அங்கு காவல் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai