சுடச்சுட

  

  மேற்கு வங்கம்: 6ஆவது கட்ட தேர்தலுக்கு 71,000 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள்

  By DIN  |   Published on : 10th May 2019 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  polling


  மக்களவை 6ஆவது கட்டத் தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலத்தில்  71,000 மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர்.
  மேற்கு வங்கத்தில் உள்ள தம்லுக், ஜார்கிராம், மெதினிபூர், புருலியா, பங்குரா உள்ளிட்ட 8 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. கடந்த 5 கட்டத் தேர்தலிலும் மேற்கு வங்கத்தின் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.
  இதை கருத்தில் கொண்டும், 6ஆவது கட்டத் தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யவும், மேற்கு வங்கத்தில் 71,000 மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது:
  8 தொகுதிகளுக்கு வரும் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி, அங்கு 71,000 மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த வீரர்கள், சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப், எஸ்எஸ்பி, ஐடிபிபி, ஆர்பிஎஃப், ஆர்ஏஎஃப் படைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.
  தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நக்ஸலைட் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் ஜங்கல்மகாலும் ஒன்று. அப்பகுதியில் கண்ணி வெடி மூலம் நக்ஸலைட்டுகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால், வாகனங்களில் செல்வதை தவிர்க்கும்படி மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தலைகவசம், துப்பாக்கி தோட்டாக்கள் துளைக்காத ஆடையை அணிய வேண்டும் என்றும், தேவையான துப்பாக்கித் தோட்டாக்களை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
   8 தொகுதிகளிலும் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு, தேடுதல் வேட்டை, சோதனை உள்ளிட்டவையும் நடத்தப்படுகிறது. வாக்காளர்கள் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், அச்சமின்றி அமைதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai