சுடச்சுட

  

  விமானப் படை விமானத்தை தனக்காக பயன்படுத்தியவர் மோடி: காங்கிரஸ் பதிலடி

  By DIN  |   Published on : 10th May 2019 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Randeep

  கோப்புப்படம்


  இந்திய விமானப் படை விமானங்களை தனது நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டவர் மோடி என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. தனது இத்தாலிய உறவுகளுக்காக, ராஜீவ் காந்தி இந்திய கடற்படைக் கப்பலைப் பயன்படுத்தினார் என்ற மோடியின் குற்றச்சாட்டுக்கு இதன் மூலம் காங்கிரஸ் பதிலளித்துள்ளது.
  தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா இது தொடர்பாக கூறியதாவது:
  பிரதமர் மோடி எவ்வித அவமானமும் இன்றி எப்படி மற்றவர்களை நோக்கி விரல் நீட்டிக் குற்றம் கூறுகிறார் என்று தெரியவில்லை. மற்றவர்களைக் குறைகூறும் முன்பு, தான் செய்தது என்ன என்பதை அவர் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். ராஜீவ் காந்தி கடற்படைக் கப்பலைத் தனக்காகப் பயன்படுத்தினார் என்று மோடி கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. மேலும், கடற்படை முன்னாள் அதிகாரியும் கூட அந்தக் குற்றச்சாட்டை மறுத்துவிட்டார்.
  இப்போது பிரதமர் மீது நான் ஆதாரத்துடன் குற்றம்சாட்டுகிறேன். அவர் இந்திய விமானப் படை விமானத்தை தனது சொந்த வாகனம் போல பயன்படுத்தியுள்ளார். இதற்கு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆதாரம் இருக்கிறது. பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட அலுவல்சாராத உள்ளூர் பயணங்களுக்காக இந்திய விமானப் படை விமானத்தை கடந்த 5 ஆண்டுகளில் 240 முறை பயன்படுத்தியுள்ளார். இதற்கான செலவாக விமானப் படைக்கு ரூ.1.4 கோடியை பாஜக அளித்துள்ளது.
  இதில், ஒடிஸாவில் கடந்த ஜனவரி 15-ஆம்  தேதி மோடி மேற்கொண்ட விமானப் பயணத்துக்காக பாஜக வெறும் 744 ரூபாயை விமானப்படைக்கு அளித்துள்ளது. இதற்கான ஆதாரம் கையிலேயே உள்ளது. இப்போது கூறுங்கள். இந்திய விமானப் படை விமானத்தை இவ்வளவு குறைந்த கட்டணத்தில் மோடியால் எப்படி பயன்படுத்த முடிந்தது? தனது சொந்த வாகனம் போலத்தானே விமானத்தை மோடி பயன்படுத்தியுள்ளார். இதற்கு பாஜகவினர் என்ன பதில் வைத்துள்ளனர் என்று சுர்ஜேவாலா கேள்வி எழுப்பினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai