ஐ.என்.எஸ். விராட் போர்க் கப்பலை ராஜீவ் தவறாகப் பயன்படுத்தியதில்லை: கடற்படை முன்னாள் தளபதி

ஐ.என்.எஸ். விராட் போர்க் கப்பலை தனது குடும்பத்தினரின் பயணத்துக்காக மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பயன்படுத்தியதாக கூறுவது தவறு என்று இந்திய கடற்படை முன்னாள் தளபதி எல். ராம்தாஸ் தெரிவித்துள்ளார்
ஐ.என்.எஸ். விராட் போர்க் கப்பலை ராஜீவ் தவறாகப் பயன்படுத்தியதில்லை: கடற்படை முன்னாள் தளபதி


ஐ.என்.எஸ். விராட் போர்க் கப்பலை தனது குடும்பத்தினரின் பயணத்துக்காக மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பயன்படுத்தியதாக கூறுவது தவறு என்று இந்திய கடற்படை முன்னாள் தளபதி எல். ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியபோது, ஐ.என்.எஸ். விராட் போர்க் கப்பலை 1987-ஆம் ஆண்டு தனது குடும்பத்தினர் பயணம் செய்யும் வாகனம் போன்று ராஜீவ் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார். 
குறிப்பாக, சோனியா காந்தியின் குடும்பத்தினரான வெளிநாட்டினர், அக்கப்பலில் பயணம் செய்ததாகவும் மோடி புகார் கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை இந்திய கடற்படை முன்னாள் தளபதி எல். ராம்தாஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தேசிய விளையாட்டு போட்டியில் பரிசு வென்றவர்களுக்கு விருதுகள் கொடுப்பதற்கு திருவனந்தபுரத்துக்கு அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி வந்திருந்தார். இதைத் தொடர்ந்து, லட்சத்தீவில் நடைபெற்ற அரசு விழாவுக்கு ராஜீவ் காந்தி சென்றார். 
அப்போது விராட் போர்க்கப்பலில் ராஜீவ் காந்தியும், சோனியா காந்தியும் சென்றனர். அவர்களுடன் வெளிநாட்டினர் யாரும் பயணிக்கவில்லை. 
கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தென் பிராந்திய கடற்படை கமாண்டராக நான் அப்போது பதவி வகித்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எஸ். விராட் போர்க் கப்பலின் முன்னாள் கமாண்டிங் அதிகாரியான வினோத் பாஸ்ரிசாவும், அக்கப்பலில் ராஜீவ் காந்தி பயணித்தபோது, அனைத்து நடைமுறைகளும் முறையாக கடைப்பிடிக்கப்பட்டன, அக்கப்பலில் வெளிநாட்டினரோ அல்லது வேறு விருந்தினர்களோ பயணிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். 
மேலும், விராட் போர்க்கப்பலை ராஜீவ், தனது குடும்பத்தினரின் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தியதாக கூறுவது முழுவதும் தவறு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுமுறைக்குப் பயன்படுத்தினார்: இன்னொரு முன்னாள் கடற்படை கமாண்டரான வி.கே. ஜேட்லி, சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், தங்களது விடுமுறைகளைக் கொண்டாடுவதற்கு, பங்காரம் தீவுக்கு ஐ.என்.எஸ். விராட் போர்க் கப்பலில் ராஜீவும், சோனியாவும் சென்றனர். 
இந்திய கடற்படை நிதி, இதற்காக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. இதற்கு நானே சாட்சி. அந்நேரத்தில் விராட் போர்க் கப்பலில்தான் நான் பணி அமர்த்தப்பட்டு இருந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com