காங்கிரஸ் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது: நிதின் கட்கரி

வறுமையை ஒழிப்பதில் காங்கிரஸ் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி
காங்கிரஸ் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது: நிதின் கட்கரி


வறுமையை ஒழிப்பதில் காங்கிரஸ் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வறுமையை ஒழிக்க, ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72, 000 குறைந்தபட்ச வருவாய் அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளதை குறிப்பிட்டு நிதின் கட்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கட்கரி வியாழக்கிழமை கூறியதாவது:
1947-ஆம் ஆண்டு ஜவாஹர்லால் நேரு பிரதமராக பதவியேற்றபோது, வறுமையை ஒழிப்பதாக அறிவித்தார். அவரது மகள் இந்திரா காந்தியும், வறுமையை ஒழிப்போம் என்று கூறி தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார்.  அதன் பின்னர் ராஜீவ் காந்தியும் அதே வாக்குறுதியை அளித்தார். ஆனால் வறுமையை யாரும் ஒழிக்கவில்லை. 
இப்போது ராகுல் காந்தியும் வறுமையை ஒழிப்போம், வறுமை மீது துல்லியத் தாக்குதல் நடத்துவோம் என்று கூறுகிறார். ஒவ்வொரு முறையும் வறுமையை ஒழிப்போம் என்று வாக்குறுதி அளிக்கும் காங்கிரஸ் அதை நிறைவேற்றுவதில் தோல்வியை தழுவியுள்ளது. அதனால்,  வறுமையை காங்கிரஸ் ஒழிக்கும் என்ற நம்பகத்தன்மையை அக்கட்சி இழந்துவிட்டது. 
வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள்..: பாஜக அரசின் சாதனைகளும், நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் தேர்தல் பிரசாரத்தில் இருக்கக் கூடாதென்று காங்கிரஸ் வேண்டுமென்றே அவதூறுகளை பரப்பி வருகிறது.
தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவதூறாக கருத்து தெரிவிப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. ஆனால் காங்கிரஸ் கூறிய அவதூறு கருத்துகளின் பட்டியலே என்னிடம் உள்ளது.
50 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை 5 ஆண்டுகளில் பாஜக செய்து விட்டதை மக்கள் தெரிந்து கொள்வதை தடுக்கும் வகையில், தேவையற்ற கருத்துகளை காங்கிரஸ் தெரிவிக்கிறது. தலித், சிறுபான்மையினர், எஸ்சி, எஸ்டி ஆகிய மக்களிடம் வேண்டுமென்றே  காங்கிரஸ் அச்சத்தை ஏற்படுத்துகிறது. 
காங்கிரஸ் ஆட்சியில் நாட்டு மக்களுக்கு அநியாயம் மட்டுமே இழைக்கப்பட்டது. தவறான பொருளாதார கொள்கைகளுக்கும், ஊழல் நிர்வாகத்துக்கும் காங்கிரஸ் உதாராணமாக உள்ளது.
வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம்..: உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜில் இருந்து வாராணசிக்கு நீர்வழிப் போக்குவரத்து ஏற்பாடு செய்வதாக அளித்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றினோம். அதனால்தான் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவால் படகு பயணம் மேற்கொள்ள முடிந்தது.
கடந்த முறை கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்றபோது, விருந்தினராக வந்திருந்த மொரீசியஸ் பிரதமர் கங்கையில் நீராட முடியாமல் சென்றார். ஆனால் பாஜக ஆட்சியில் சுமார் 20 கோடி பேர் கங்கையில் புனித நீராடினர். அந்த அளவுக்கு கங்கை நதி தூய்மையாக இருந்தது.
கங்கை நதியை நாங்கள் தூய்மைப்படுத்தியதால்தான் பிரியங்காவால் அதை அருந்த முடிந்தது.இதுபுரியாமல் அவர் பாஜகவை விமர்சித்து வருகிறார். 1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நியாயமும் கிடைக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் நியாயம் குறித்து பேசிவருகிறது.
வளர்ச்சித் திட்டங்களே பலம்..: பாஜக தலைமையிலான அரசு கொண்டு வந்த வளர்ச்சித் திட்டங்களே எங்களது பலம். எங்களது அனைத்து திட்டங்களும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது. வரலாற்றில் சாதனை படைக்கும் வகையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com