மிளகாய் ஏற்றுமதி: இந்தியா-சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியாவில் இருந்து அண்டை நாடான  சீனாவுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இருநாடுகளுக்கிடையே வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. 
மிளகாய் ஏற்றுமதி: இந்தியா-சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்து


இந்தியாவில் இருந்து அண்டை நாடான  சீனாவுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இருநாடுகளுக்கிடையே வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. 
இதுதொடர்பாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சீன பொது நிர்வாகத் துறை அமைச்சர் லீ குவோவை, இந்திய வர்த்தகத் துறை செயலர் அனுப் வதவான் வியாழக்கிழமை சந்தித்து பேசினார். 
இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை பலப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வர்த்தகம் மேற்கொள்வதில் உள்ள பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்திய விவசாயப் பொருள்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா அளித்துள்ள பரிந்துரைகளை பரிசீலனை செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 
இரு தரப்புக்கும் பலனளிக்கும் வகையில் வர்த்தகம் மேற்கொள்ளப்படும் என்று கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது. இறுதியாக, இந்திய மிளகாயை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
சீன சந்தையில் இந்தியப் பொருள்களை விற்பதற்கு மத்திய அரசு முயற்சித்து வந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஜவுளி, தோட்டக்கலை, ரசாயனம், மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட 380 விதமான பொருள்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா பரிந்துரைத்திருந்தது. 
இந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியை சீனா அளித்துவிட்டால், அந்நாட்டுடன் உள்ள வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கலாம் என்று இந்தியா திட்டமிட்டு வருகிறது.
இந்தியா-சீனா இடையே கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை ரூ. 3.5லட்சம் கோடி அளவில் மட்டுமே வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அதுமட்டுமன்றி, வரி சாராத கட்டுப்பாட்டுகள் மூலம் இந்தியப் பொருள்களின் ஏற்றமதியை சீனா குறைத்து வருகிறது.
இந்நிலையில், இந்தியா-சீனா இடையேயான வர்த்தகம் குறித்து இந்திய வர்த்தக மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் கூறுகையில், அரிசி, மாம்பழச் சாறு, சோயாபீன், எள், மீன் எண்ணெய் போன்ற பொருள்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய வர்த்தக நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. கடல்சார் பொருள்கள் மற்றும் இறைச்சி உள்ளிட்டவற்றையும் சீன சந்தையில் விற்க இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com