மோடியால் மட்டுமே தேச பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்: அமித் ஷா

தேசப் பாதுகாப்பை பிரதமர் நரேந்திர மோடி ஒருவரால் மட்டுமே உறுதி செய்ய முடியும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மோடியால் மட்டுமே தேச பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்: அமித் ஷா


தேசப் பாதுகாப்பை பிரதமர் நரேந்திர மோடி ஒருவரால் மட்டுமே உறுதி செய்ய முடியும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், சந்த்கபிர்நகர், சித்தார்த்நகர், பல்ராம்பூர் ஆகிய இடங்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அமித் ஷா வியாழக்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
 ஏழை குடும்ப பின்னணியில் இருந்து மோடி பிரதமராகியுள்ளார். இதை எதிர்க்கட்சிகளால் சகித்து கொள்ள முடியவில்லை. இதனாலேயே மோடியை காங்கிரஸ் கட்சியும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் ஆகியோரும் பல்வேறு வகையான வார்த்தைகளையும் பயன்படுத்தி விமர்சிக்கிறார்கள். சில நேரம், அவரை ஹிட்லர் என்றும், சில நேரம் முசோலினி என்றும், சில நேரம் கொலைகாரர் என்றும் தெரிவிக்கின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஒன்று மட்டும் தெரிவித்து கொள்கிறேன். எவ்வளவு அதிகமாக நீங்கள் விமர்சிக்கிறீர்களோ, அவ்வளவு அதிக எண்ணிக்கையில் தாமரைகள் மலரும். புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து இந்தியா மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்தும் என பாகிஸ்தான் நினைத்தது. ஆனால், 56 அங்குல மார்பு கொண்ட மோடி, விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தினார். இது பாகிஸ்தானை அதிர்ச்சியடைய செய்தது.
பாலாகோட் தாக்குதல் சம்பவத்தை நாட்டு மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் எந்த சமரசத்தையும் பாஜக அரசு செய்யாது. நாட்டின் பிரதமராக மோடி மீண்டும் வந்தால், இந்தியாவை கெட்ட எண்ணத்துடன் பார்க்கக் கூட தயங்குவார்கள். ஊடுருவல்காரர்கள், அவர்களது இடத்திலேயே கொல்லப்படுவார்கள். மோடியை தவிர, வேறு எவராலும் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், பிரதமராக நரேந்திர மோடியே மீண்டும் பதவியேற்பார். மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பிரதமராக திங்கள்கிழமை மாயாவதி இருப்பார். சரத் பவார் செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமை வேறு எவரேனும் பிரதமராக பதவி வகிப்பார்கள். இவர்கள் அனைவரும் சுயநலத்துக்காகவும், தங்களின் ஊழலையும், குடும்பத்தினரின் ஊழலையும் மூடி மறைக்கவுமே அரசியலில் இருக்கின்றனர்.
இந்தியாவிடம் இருந்து காஷ்மீரை யாராலும் பிரிக்க முடியாது. பாஜக இருக்கும் வரையிலும், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒன்றாகவே காஷ்மீர் இருக்கும். மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் 370ஆவது சட்டப் பிரிவு திரும்பப் பெறப்படும் என்றார் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com