சுடச்சுட

  

  அயோத்தி விவகாரம்: மத்தியஸ்தர் குழுவுக்கு காலஅவகாசம் நீட்டிப்பு

  By DIN  |   Published on : 11th May 2019 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supremecourt


  அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியாக நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவுக்கு ஆகஸ்டு 15-ஆம் தேதி வரை காலஅவகாசத்தை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் எவருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய அமைப்புகள் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. 
  இந்தத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இது வெறும் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. நிலம் தொடர்பான பிரச்னை என்றால், எளிதில் தீர்ப்பு வழங்கிவிடலாம். ஆனால், ஹிந்து-முஸ்லிம் மதத்தினரிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்புகிறது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவதற்காக மத்தியஸ்தரை நியமனம் செய்வது தொடர்பாக பரிசீலிக்க உள்ளோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
  இடைக்கால அறிக்கை: இதையடுத்து, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழுவைக் கடந்த மார்ச் மாதம் 8-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அமைத்தது. அதில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 
  இந்த விவகாரத்தில் 8 வாரத்துக்குள் தீர்வு காண முயல வேண்டுமென மத்தியஸ்தர் குழுவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், மத்தியஸ்தர் குழு தனது பணியை உத்தரப் பிரதேசத்தின் ஃபைசாபாத் மாவட்டத்தில் உள்ள அவத் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மார்ச் 13-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மத்தியஸ்தம் நடைபெறும் பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. 
  இதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, தனது இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் கடந்த 6-ஆம் தேதி மத்தியஸ்தர் குழு தாக்கல் செய்தது. 
  சுமுகப் பேச்சுவார்த்தை: இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை அரசியல் சாசன அமர்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே பேச்சுவார்த்தை சுமுகமாகச் சென்றுகொண்டிருப்பதாகவும், அனைத்து தரப்பினரும் மத்தியஸ்தர் குழுவுக்குத் தகுந்த ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:
  மத்தியஸ்தர் குழுவின் அறிக்கை மே 7-ஆம் தேதி எங்களுக்குக் கிடைக்கப்பெற்றது. இந்த விவகாரத்தில் உரிய தீர்வு காண, மத்தியஸ்தர் குழுத் தலைவர் எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா ஆகஸ்டு 15-ஆம் தேதி வரை காலஅவகாசம் கோரியுள்ளார். 
  இந்த விவகாரம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதில் தகுந்த தீர்வு காண மனுதாரர்களும் ஆவலாக உள்ளனர். எனவே, மத்தியஸ்தர் குழுவின் காலஅவகாசத்தை நீட்டிப்பதில் என்ன தவறு இருக்கப்போகிறது?
  மத்தியஸ்தர் குழுவுக்கான காலஅவகாசத்தை ஆகஸ்டு 15-ஆம் தேதி வரை நீட்டிக்கிறோம். எனினும், தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முழுத் தகவல்களையும் தற்போது கூற இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai