சுடச்சுட

  

  கன்னியாஸ்திரி பாலியல் விவகாரம்: பேராயர் முளக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்

  By DIN  |   Published on : 11th May 2019 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  கன்னியாஸ்திரியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் பேராயர் ஃபிராங்கோ முளக்கல், கேரள மாநிலம் பாலாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில்  வெள்ளிக்கிழமை ஆஜரானார். 
  அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மேலும் நீட்டிக்கக்கோரி அளிக்கப்பட்ட மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. 
  முன்னதாக, இந்த வழக்கை விசாரித்து வரும் கேரள போலீஸாரின் சிறப்பு புலனாய்வுக்குழு, முளக்கல் மீதான குற்றப்பத்திரிகையையும், அதுதொடர்பான ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.  நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்பு பாலா அருகிலுள்ள பரணங்கானத்தில் உள்ள தேவாலயத்தில் அவர் வழிபாடு நடத்தினார். 
  ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மாவட்ட பேராயராக இருந்தவர் ஃபிராங்கோ முளக்கல் (55).  2014 மற்றும் 2016ஆம் ஆண்டுக்குள்பட்ட காலத்தில், கொச்சி அருகே குரவிலங்காடு பகுதியில் உள்ள ஒரு விருந்தினர் விடுதியில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அங்கு பணிபுரிந்து வந்த கன்னியாஸ்திரி ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். 
  போலீஸார், புகார்ப்பதிவு செய்ய மறுத்ததால் கன்னியாஸ்திரிகள் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பின்னர், பேராயர் மீது கொலை மிரட்டல் வழக்கு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். 
  இந்த வழக்கில் தன்மீது தவறான புகார்ப்பதிவு செய்யப்பட்டதாக முளக்கல் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, கன்னியாஸ்திரி மூலம் வாடிகனுக்கு அனுப்பப்பட்ட புகாரின்பேரில், அவரது பேராயர் பதவி தற்காலிகமாக விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 
  பின்னர், கைது செய்யப்பட்ட முளக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த அக்டோபர் 16ஆம் தேதி கேரள உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. பாலா கிளைச்சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முளக்கல் மீது,  சிறப்பு புலனாய்வு போலீஸார் கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வரும் ஜூன் 7ஆம் தேதி ஜாமீன் நீட்டிப்புக் குறித்து  பரிசீலனை செய்வதாக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai