சுடச்சுட

  

  சீக்கிய கலவரம்: பிட்ரோடாவின் கருத்து காங். மனநிலையை காட்டுகிறது: பிரதமர் மோடி தாக்கு

  By DIN  |   Published on : 11th May 2019 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  ஹிமாசலப் பிரதேசம், மாண்டியா பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாலை அணிவித்து வரவேற்பளிக்கும்  அந்த மாநில முதல்வர் ஜெய் ராம் தாக்குர்

  1984-ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து அக்கட்சியின் மனநிலையையும், குணத்தையும் காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவரது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. குறிப்பாக வட இந்தியாவில் தீவிர கலவரம் நடைபெற்றது. அதில் பல சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். 
  இந்நிலையில், ராஜீவ் காந்தியின் உத்தரவுப்படியே அந்த கலவரங்கள் நிகழ்ந்ததாக பாஜக குற்றம்சாட்டியது. அது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவிடம் கருத்து கேட்டபோது, அவ்வாறு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இது பாஜகவின் அடுத்த பொய்யாக இருக்கலாம்.  நடந்தது, நடந்து விட்டது. 1984-ஆம் ஆண்டு நடைபெற்றது குறித்து இப்போது பேசுவதற்கு என்ன உள்ளது? அது முடிந்து போன விஷயம். பாஜக ஆட்சியில் நாட்டுக்காக என்ன செய்தீர்கள்? அது குறித்து பேசுங்கள் என்று சாம் பிட்ரோடா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
  இதைக் குறிப்பிட்டு ஹரியாணாவின் ரோத்தக் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:
  நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் உண்மையான சுயரூபம் சாம் பிட்ரோடா கூறிய வார்த்தைகளில் தெரிய வந்துள்ளது. இந்த வார்த்தைகள் சாதாரணமாக கூறப்பட்டது அல்ல. இது அக்கட்சியின் மனநிலையையும், அகந்தையையும் காட்டுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குருவும், அவரது குடும்பத்தினருக்கு மிகவும் நெருங்கியவருமான சாம் பிட்ரோடா இவ்வாறு கூறியதற்கு காங்கிரஸ் என்ன பதிலளிக்கப் போகிறது? 
  தில்லியில் மட்டும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரங்களில் பல காங்கிரஸ் தலைவர்களின் மீது குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அவர்கள் நடந்தது, நடந்து விட்டது. அடுத்து என்ன என்று பார்ப்போம் என்று கூறுகிறார்கள். இந்த கருத்து, இத்தனை ஆண்டு காலமாக எவ்வளவு அகந்தையுடன் அவர்கள் ஆட்சி செய்தார்கள் என்பதைக் காட்டுகிறது.
  பாவச் செயல்களுக்காக தேர்தலில் தோல்வி: காங்கிரஸ் கட்சியின் ஒரு முகம் மட்டுமே தெரிய வந்துள்ளது. அவர்கள், மனிதர்களை மனிதர்களாக நடத்தியதே இல்லை. இந்த பாவச்செயல்களுக்காகத் தான் கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு வெறும் 44 இடங்கள் மட்டும் கிடைத்தது. இந்த முறை 44 இடங்களைகூட மக்கள் அளிக்கப் போவதில்லை. 
  ஒரு குடும்பத்தினரை மட்டும் உயர்த்துவதற்காக, காங்கிரஸ் கட்சியில், பல தகுதிவாய்ந்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். சட்லெஜ் நதியில் பக்ராநங்கல் அணை கட்டுவதற்கு விவசாயிகளின் தலைவர் சோட்டு ராம் அரும்பாடுபட்டார். ஆனால் அவர் உழைப்புக்கு எவ்வித மரியாதையையும் காங்கிரஸ் அளிக்கவில்லை.
  ஊழல் செய்வது கலாசாரம்: ஊழல் செய்வதை கலாசாரமாக கொண்டு சோனியா காந்தி குடும்பம் செயல்பட்டு வருகிறது. ஹரியாணாவில் ஆட்சி செய்த முந்தைய எஸ்.எஸ். ஹூடா  தலைமையிலான காங்கிரஸ் அரசு, அனைத்து விதமான ஊழல்களிலும் ஈடுபட்டது. சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவும், ஹூடாவும் இணைந்து நில மோசடியில் ஈடுபட்டனர். ஆனால் மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்ததும் அரசின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்பட்டன. 
  பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை: காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் அனைவரும் தப்பி விட்டனர். ஆனால் தேசப் பாதுகாப்பில் பாஜக ஒருபோதும் சமரசம் கொள்ளாது. பாகிஸ்தான் நம்மீது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினால், நாம் பதிலுக்கு வெடிகுண்டால் தாக்குதல் நடத்துவோம். அந்த அளவுக்கு வலிமை நம்மிடம் உள்ளது. பயங்கரவாதிகளை பாகிஸ்தான் வளர்த்துக் கொண்டேயிருந்தால், அவர்கள் இடத்துக்குச் சென்று இந்தியா அழிக்கும் என்றார் மோடி.
  வீரர்களை தவறாக வழிநடத்திய காங்கிரஸ்: ஹிமாசலப் பிரதேசம், மாண்டி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, ஒரே பதவி, ஒரே ஊதியம்  திட்டம் குறித்து வீரர்களை தவறாக வழிநடத்தியதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஒரே பதவி, ஒரே ஊதியம் திட்டத்தை பாஜகதான் முழுமையாக செயல்படுத்தியது. ஆனால் இந்த விவகாரத்தில் வீரர்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் 2017-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தீர்கள். நாங்கள் மூன்றாவது முறையாக வெற்றி பெற மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai