சுடச்சுட

  
  modi3


  அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல டைம் வார இதழின் அட்டைப் படத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படம் இடம் பெற்றுள்ளது. அவரைக் குறித்த இரு கட்டுரைகளும் வெளியாகியுள்ளன.
  வரும் 20-ஆம் தேதியிட்ட சர்வதேச பதிப்பின் அட்டைப் படத்தை டைம் இதழின் சுட்டுரையில் வெளியிட்டது. ஐரோப்பிய நாடுகள், ஆசியா, தெற்கு பசிபிக் நாடுகள் உள்ளிட்ட இடங்களில் சர்வதேசப் பதிப்பு வெளியாகிறது. அட்டைப்படத்தில் ஓவியமாகத் தீட்டிய மோடியின் படம் அச்சிடப்பட்டுள்ளது. 
  இந்த இதழில் பிரதமர் மோடியை, இந்தியப் பிரிவினையின் தலைவர் என்று குறிப்பிட்டு பத்திரிகையாளர் ஆதிஷ் தசீர் கட்டுரை எழுதியுள்ளார். இவர் இந்திய பெண் பத்திரிகையாளர் தவ்லீன் சிங் மற்றும் பாகிஸ்தான் தொழிலதிபரும், அரசியல்வாதியுமான சல்மான் தசீர் ஆகியோரின் மகனாவார்.
  அவர் எழுதிய கட்டுரையில், கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை முன்னிறுத்தி பிரசாரம் செய்து மோடி வெற்றி பெற்றார். ஆனால் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 
  அதுமட்டுமன்றி மோடியின் பொருளாதார வாக்குறுதிகள் நிறைவேறப்படவில்லை. மத ரீதியான தேசியவாதம் வளரும் சூழலை உருவாக்கிவிட்டார். அனைவருக்குமான வளர்ச்சி என்ற நிலை மாறி, மக்கள் தற்போது தங்களிடையே உள்ள வேறுபாடுகள் குறித்து பேசத் தொடங்கிவிட்டனர். 
   மோடியை எதிர்ப்பதில் ராகுலுக்குத் துணையாக அவரது சகோதரி பிரியங்காவை அனுப்புவதைத் தவிர வேறு யோசனைகள் காங்கிரஸுக்கு இல்லை. வாரிசு அரசியலை ஊக்குவிப்பதை தவிர காங்கிரஸ் வேறு எதையும் செய்வதில்லை.
  அவரைத் தோல்வியுறச் செய்ய வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்தக் கொள்கையும் இல்லாத பலவீனமான எதிரணிதான் மோடிக்கு அதிருஷ்டவசமாக அமைந்துள்ளது. தான் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதை மோடி உணர வேண்டும். இந்தியாவில் மீண்டும் மோடி ஆட்சி வருமா? என்று அந்த கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
  சீர்திருத்தவாதி மோடி: அதே இதழில் மோடி குறித்த மற்றொரு கட்டுரை, சீர்திருத்தவாதி மோடி என்ற பெயரில் எழுதப்பட்டுள்ளது. அரசியல் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனமான யூரேசியா குழுமத்தின் நிறுவனர் இயன் பிரெம்மர் இந்த கட்டுரையை எழுதியுள்ளார். 
  அதில், பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் ஏற்றம், இறக்கம் இரண்டையும் சந்தித்துள்ளது. 
  இந்தியாவில் அதிக சீர்திருத்தங்கள் தேவை. அதை மோடியால்தான் ஏற்படுத்த முடியும். சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடனான இந்தியாவின் உறவில் மோடி மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். 
  2017-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வரிவசூல் ஆனது. ஆதார் திட்டத்தை அனைத்திலும் செயல்படுத்தியது மிகப்பெரிய சீர்திருத்தம். எனினும் நாட்டு மக்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு சில திட்டங்கள் தேவைப்படுகிறது.
  இந்தியாவுக்கு தற்போது தேவையான சீர்திருத்தத்தை மோடியால் மட்டுமே வழங்க முடியும். மோடி மீது எவ்வித குற்றப்புகார்களும் இல்லை. காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள ஏழை மக்களுக்கான குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்தால், மோடிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. காங்கிரஸ் கட்சியை கட்டுப்படுத்தும் அளவுக்கு மோடி அரசின் வளர்ச்சித் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளன என்று கூறப்பட்டிருந்தது.
  டைம் இதழின் சர்வதேச பதிப்பில் மோடி இடம் பெற்றிருந்தாலும், அமெரிக்காவில் வெளியாகும் பதிப்பில், அந்நாட்டு அதிபர் தேர்தல் போட்டியில் உள்ள எலிசபெத் வாரன் குறித்த கட்டுரையும், அவரது புகைப்படமும் அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  இதற்கு முன்னதாக, கடந்த 2015-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதியிட்ட டைம் வார இதழின் அட்டைப் பக்கத்தில் மோடி இடம் பெற்றிருந்தார். இப்போது இரண்டாவது முறையாக மோடியின் உருவப்படம் டைம் அட்டைப்படத்தில் வெளியாகியுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai