சுடச்சுட

  

  நீதித் துறையை பாதுகாக்க நீதிபதிகள் அச்சமற்றவர்களாக இருக்க வேண்டும்

  By DIN  |   Published on : 11th May 2019 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  supreme court


  நீதித் துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் நீதிபதிகள் அச்சமற்றவர்களாக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
  கடந்த 2012ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேச மாநிலம், அலாகாபாத் தலைமை மாஜிஸ்திரேட்டை தாக்க முயன்றதற்காகவும், நீதிமன்றத்தை அவமதித்ததற்காகவும் வழக்குரைஞரை குற்றவாளி என அறிவித்த அலாகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.
  இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, அந்த அமர்வு கூறியதாவது:  நீதித் துறை, நாட்டின் 4 முக்கியத் தூண்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. சமூகத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கும், சீரான சமுதாய வளர்ச்சிக்கும் நீதித் துறை மிகவும் அவசியமானதாகும்.
  அச்சம் கொண்டவர்களாக நீதிபதிகள் இருக்கக் கூடாது. அச்சமற்றவர்களாக இருந்து தீர்ப்புகளை வழங்கி நீதித் துறையைப் பாதுகாக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளையும், நீதிபதியையும் வழக்குரைஞர்கள் அவமதிக்கக் கூடாது. வழக்குரைஞரின் பணி நீதிபதியை அச்சுறுத்துவது அல்ல. நீதிபதிக்கு எதிராக புகார் எழுந்தால் உயர் அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டுமே தவிர, தகாத வார்த்தைகளை வழக்குரைஞர்கள் பிரயோகிக்கக் கூடாது. தீர்ப்பு வழங்குவதில் வழக்குரைஞர்களின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எனவே, அவர்கள் தொழில்தர்மத்தை பின்பற்றி நடக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வழக்குரைஞருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை 3 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கிறோம். அலாகாபாத் மாவட்ட நீதிமன்றத்துக்கு இந்தக் காலகட்டத்தில் அவர் செல்லக் கூடாது. ஜூலை 1ஆம் தேதி முதல், 2022 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி இந்த தடைக் காலம் அமலில் இருக்கும். 3 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை குறைக்கப்படும். ஒருவேளை இந்தக் காலகட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட வழக்குரைஞருக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்படும் என்று அந்த அமர்வு தீர்ப்பளித்தது. அந்த வழக்குரைஞருக்கு அலாகாபாத் உயர்நீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனையுடன் ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருந்தது. அபராதம் செலுத்தத் தவறினால் 15 நாள் சிறை வாசம் கூடுதலாக அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai