தில்லி ஆம் ஆத்மி வேட்பாளரை விமர்சித்து துண்டுப்பிரசுரம்: வழக்குப் பதிய தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்

கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி மர்லினா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு தில்லி
துண்டு பிரசுரம் வெளியானது தொடர்பாக ஸ்வாதி மாலிவாலிடம் புகார் அளிக்கிறார் அதிஷி.
துண்டு பிரசுரம் வெளியானது தொடர்பாக ஸ்வாதி மாலிவாலிடம் புகார் அளிக்கிறார் அதிஷி.


கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி மர்லினா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு தில்லி காவல்துறைக்கு கிழக்கு தில்லி தொகுதி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். 
தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய ஆம் ஆத்மி கட்சி, அதிஷிக்கு எதிராக கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் அவதூறு பரப்பும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டதாக குற்றம்சாட்டி, அத்தகைய துண்டுப் பிரசுரத்தையும் வெளியிட்டது. 
அந்த துண்டுப் பிரசுரங்களை, கிழக்கு தில்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் கெளதம் கம்பீர் விநியோகித்ததாக அதிஷியும், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் குற்றம்சாட்டினர். இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற சில மணி நேரத்துக்குப் பிறகு, துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யுமாறு கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி தேர்தல் அதிகாரி கே.மகேஷ், கிழக்கு தில்லி காவல்துறை துணை ஆணையர் ஜஸ்மீத் சிங்குக்கு அறிவுறுத்தியுள்ளார்.
எனினும், எவரேனும் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா, அல்லது தேர்தல் அலுவலகம் தானாக இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறதா என்பதை கிழக்கு தில்லி தேர்தல் அதிகாரி மகேஷ் தெரிவிக்கவில்லை. 
கேஜரிவால், அதிஷிக்கு நோட்டீஸ்: இதனிடையே, துண்டுப் பிரசுர விவகாரத்தில் ஆம் ஆத்மி தன் மீது தேவையின்றி குற்றம்சாட்டுவதாகத் தெரிவித்துள்ள பாஜக வேட்பாளர் கெளதம் கம்பீர், இதுதொடர்பாக தன்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனக் கூறி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி மர்லினா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 
முன்னதாக, இந்த விவகாரத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாக ஆம் ஆத்மி நிரூபித்துவிட்டால் வேட்புமனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்த கம்பீர், நிரூபிக்க இயலாவிட்டால் கேஜரிவால் அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
டிசிடபிள்யூ நோட்டீஸ்: இந்நிலையில், துண்டு பிரசுரம் வெளியானது தொடர்பாக மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவாலிடம் வெள்ளிக்கிழமை அதிஷி புகார் அளித்தார். இதையடுத்து அதிஷிக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பி தில்லி காவல்துறைக்கு தில்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com