பாஜக ஆட்சியில் 7.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்: ராஜ்நாத் சிங்

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார  வளர்ச்சித் திட்டங்களால்  7.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாஜக ஆட்சியில் 7.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்: ராஜ்நாத் சிங்


பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார  வளர்ச்சித் திட்டங்களால்  7.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார். 
பிகார் மாநிலம் வைஷாலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சரையா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் மேலும் பேசியதாவது: வலுவான நிதி மேலாண்மை மற்றும் ஊழல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, நாட்டில் விலைவாசி உயர்வு கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவரை எந்த ஒரு தனிப்பட்ட நபரும், பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டதாக கூறி பிரச்னையை எழுப்பவில்லை. இதுபோன்ற அதிசய நிகழ்வு தற்போது இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நடைபெற்ற தேர்தலிலும் இதேபோல, விலைவாசி பிரச்னை எழாமல் ஒரு அதிசயம் நடைபெற்றது. 
எல்லாவற்றுக்கும் மேலாக, பயங்கரவாதிகளுக்கு எதிராக சிறப்பான முறையில் பணியாற்றி அவர்களை பாஜக ஒடுக்கியுள்ளது. ஆனால், இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால், துரதிருஷ்டவசமாக அவர்களுடன் சமாதான கொடியையே பறக்கச் செய்தனர். 
தற்போதைய ஆட்சியில், நம்முடைய ராணுவத்தினருக்கு முழுச்சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை எல்லைத்தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தி சாதித்துள்ளனர். அதேபோல, விண்வெளி போர்த்திறனை மேம்படுத்தியுள்ளோம். எதிரி நாட்டின் செயற்கைகோளை, நமது ஏவுகணையால் 3 நிமிடங்களில் தாக்கி அழிக்க முடியும். 
கடந்த 55 ஆண்டுகளாக ஆட்சிப் புரிந்த காங்கிரஸ் மக்களின் வளர்ச்சி குறித்து அக்கறை காட்டவில்லை. அவர்களின் முன்னேற்றத்துக்கான வழிமுறைகளை செய்து தராமல், தவறான வாக்குறுதிகளைக் கூறியே ஆட்சி நடத்தி வந்தது.  
தற்போதைய நிலையிலும்,  காங்கிரஸ் முந்தைய பாணியையே பின்பற்றுகிறது.  ஆனால், மோடி தலைமையிலான அரசோ,  ஏழை மக்களைப் பற்றியும், அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது குறித்தும்தான் கவலை கொள்கிறது. 
பிரதமராக மோடி, பதவியேற்றப்பின், கடந்த 64 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சொந்த வீடு இல்லாத 1.3 கோடி குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பொது சுகாதாரம் சிறப்பாக பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் தேசிய நெடுஞ்சாலையில் 32 கி.மீ.தூரத்துக்கு புதிய சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
கடந்த 5 ஆண்டு காலத்தில், பிரதமர் மோடியின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மண்டல வளர்ச்சித் திட்டங்களால் நாட்டில் 7.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். 
தொடர்ந்து, 5 முதல் 8 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி நீடிக்கும்பட்சத்தில், நாட்டில் வறுமை வேரோடு அழிக்கப்பட்டு விடும். வரும் 2022ஆம் ஆண்டுக்குள் நாட்டில் அனைத்து குடும்பத்தினருக்கும் சொந்த வீடு வழங்கவும், சமையல் எரிவாயு இணைப்பு வழங்கவும் பாஜக உறுதி பூண்டுள்ளது என்று பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com