சுடச்சுட

  

  குருதாஸ்பூரில் சன்னி தியோல் போட்டியிட பாஜகவின் நெருக்கடியே காரணம்

  By DIN  |   Published on : 12th May 2019 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  AmarinderSingh

  பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் நடிகர் சன்னி தியோல் போட்டியிட பாஜகவின் நெருக்கடியே காரணம் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.
   குருதாஸ்பூரில் வரும் 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாவ் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அமரீந்தர் சிங் பேசியதாவது:
   குருதாஸ்பூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாக்கரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். சர்வதேச எல்லைப் பகுதியையொட்டி அமைந்துள்ள இந்தத் தொகுதியை இவர் மேம்படுத்துவார். பாஜக சார்பில் போட்டியிடும் நடிகர் சன்னி தியோல் மும்பையைச் சேர்ந்தவர். அவருக்கு குருதாஸ்பூர் தொகுதியில் நிலவும் பிரச்னைகள் குறித்து எதுவும் தெரியாது. பாஜக அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே சன்னி தியோல் குருதாஸ்பூரில் போட்டியிடுகிறார். வங்கிகளில் பல கோடி ரூபாய் கடனை சன்னி தியோல் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
   வருமான வரித் துறையை பயன்படுத்தி சோதனை நடத்தப்படும் என்று பாஜக அவரை மிரட்டியுள்ளது. அக்கட்சியின் தொடர் அழுத்தத்தின் காரணமாகவே அவர் இத்தேர்தலில் குருதாஸ்பூரில் போட்டியிடுகிறார். அண்மையில் தொலைக்காட்சியில் சன்னி தியோல் பங்கேற்ற நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதில், பாலாகோட் தாக்குதல் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்கிறார். அதற்கு, அப்படி என்றால் என்ன? என்று சன்னி தியோல் கேட்கிறார். நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே தெரியாமல் அவர் அரசியலுக்குள் ஏன் நுழைய வேண்டும்.
   சன்னி தியோலின் வீடு, தொழில் அனைத்தும் மும்பைதான். மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் அவர் மும்பைக்கு சென்று விடுவார். வாக்காளர்கள் சன்னி தியோலுடன் புகைப்படம் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், வாக்களித்து விடாதீர்கள்.
   சுனில் ஜாக்கர் மக்களுக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரை நீங்கள் பஞ்சாப் முதல்வராகக் கூட பார்க்க வாய்ப்புள்ளது என்றார் அமரீந்தர் சிங்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai