சுடச்சுட

  

  ஜார்க்கண்டில் வளர்ச்சியை ஏற்படுத்தாத 3 முன்னாள் முதல்வர்கள்: அமித் ஷா குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 12th May 2019 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடிச் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் சந்தல் பர்கானா பிராந்தியத்தில் இருந்து இந்த மாநில முதல்வரான 3 பேர், இந்தப் பகுதியில் வளர்ச்சியை ஏற்படுத்த தவறிவிட்டனர் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.
   ஜார்க்கண்ட் மாநிலம் கடந்த 2000-ஆம் ஆண்டில் உதயமான பிறகு நிர்வாக வசதிக்காக, சந்தல் பர்கானா, சோட்டா நாகபுரி என இரு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
   இதில், சந்தல் பர்கானா பிராந்தியத்தில் உள்ள தும்கா(எஸ்.டி.), ராஜ்மஹல்(எஸ்.டி.), கோட்டா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளிலும் வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அங்குள்ள பாகூரில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அமித் ஷா பேசியதாவது: சந்தல் பர்கானா பிராந்தியம், 3 முதல்வர்களை (சிபுசோரன், ஹேமந்த் சோரன், பாபுலால் மாரண்டி) இந்த மாநிலத்துக்கு கொடுத்தது. ஆனால், அவர்கள் மூவரும் இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு எதையும் செய்யவில்லை. தற்போதைய முதல்வர் ரகுவர்தாஸ் தலைமையிலான பாஜக அரசுதான் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றியுள்ளது.
   நாட்டில் பயங்கரவாதத்தை வேரறுப்பதில் மோடி தலைமையிலான மத்திய அரசு வெற்றியடைந்துள்ளது. இதேபோல், மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதத்தை அழிப்பதில் ரகுவர்தாஸ் கிட்டத்தட்ட வெற்றியடைந்து விட்டார்.
   நான் செல்லும் இடமெல்லாம் மோடி, மோடி என்ற முழக்கத்தை கேட்க முடிகிறது. அது, 125 கோடி மக்களின் குரலாக ஒலிக்கிறது. இந்த முழக்கத்தால் எதிர்க்கட்சிக் கூட்டணி கலக்கம் அடைந்துள்ளது. மோடியுடன் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒப்பிட முடியாது. 55 ஆண்டு கால காங்கிரஸ் அரசின் பணிகளை 5 ஆண்டுகளில் மோடி நிறைவேற்றி விட்டார். கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ததுடன் மக்களின் எதிர்பார்ப்புகளையும் மோடி பூர்த்தி செய்துள்ளார். அதனால்தான், மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்றார் அமித் ஷா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai