சுடச்சுட

  

  திருப்பதி தேவஸ்தான சில்லறை நாணயங்களை உருக்க எதிர்ப்பு

  By DIN  |   Published on : 12th May 2019 01:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருப்பதி தேவஸ்தான சில்லறை நாணயங்களை உருக்குவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
   இதுகுறித்து திருப்பதி நகர காங்கிரஸ் கட்சி அமைப்பாளர் நவீன்குமார் ரெட்டி, சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: தற்போது செலாவணியில் இல்லாத தேவஸ்தான கருவூத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சில்லறை நாணயங்களை தேவஸ்தானம் உருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவது சட்டப்படி குற்றம் ஆகும். ஏழுமலையானுக்கு பக்தர்கள் பணத்தை முடிப்பு கட்டி வேண்டுக்கொண்டு, சில்லறை நாணயங்களை சேர்த்து வைத்து உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
   அவ்வாறு அவர்கள் பக்தியுடன் உண்டியலில் செலுத்திய சில்லறை நாணயங்களை உருக்குவது பாவம். இந்திய அரசு வெளியிட்ட சில்லறை நாணயங்களை யாராவது உருக்கினாலோ, சேதப்படுத்தினாலோ அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை என 2009-ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
   அதையும் மீறி சில்லறை நாணயங்களை உருக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்திய சில்லறை நாணயங்களை உடனுக்குடன் ரிசர்வ் வங்கியில் அளித்து மாற்றாமல், தேவஸ்தான அதிகாரிகள் நிலுவையில் வைத்ததால் தற்போது செலாவணியில் இல்லாத நாணயங்களை உருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் பல பொருள்கள், காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை ஏலம் மூலம் விற்கும் தேவஸ்தானம், சில்லறை நாணயங்களை மட்டும் உருக்க நடவடிக்கை மேற்கொண்டது ஏன்?
   தற்போது தேவஸ்தானத்திடம் நிலுவையில் உள்ள 1, 2, 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் ரூ. 30 கோடி மற்றும் ஆந்திரா வங்கியில் உள்ள ரூ. 20 கோடி மதிப்பிலான சில்லறை நாணயங்களை நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான விசாரணை மையங்கள் மூலம் அளித்தால், சில்லறை தேவைப்படுவோர் அதைப் பெற்றுக் கொண்டு பயன்பெறுவர்.
   இதனால் தேவஸ்தானத்திடம் உள்ள சில்லறைகள், ரூபாய் நோட்டுகளாக மாற்றப்படும். இந்திய நாணயங்களுக்கே இந்த நிலை என்றால், தேவஸ்தானத்திடம் நிலுவையில் உள்ள ரூ. 20 கோடி மதிப்புள்ள 100 டன் வெளிநாட்டு நாணயங்களை எவ்வாறு தேவஸ்தானம் ரூபாய் நோட்டுகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளும். இனியாவது அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு சில்லறை நாணயங்களை நிலுவையில் வைக்காமல் உடனுக்குடன் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai