சுடச்சுட

    

    நான் ஏழைகளின் ஜாதி: பிரதமர் மோடி

    By  சோனேபத்ரா/காஜிப்பூர் (உ.பி.),  |   Published on : 12th May 2019 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    MODISONE

    பிரதமர் நரேந்திர மோடியின் ஜாதி தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பிய நிலையில், "ஏழை மக்களின் ஜாதி எதுவோ, அதுவே எனது ஜாதி' என்று அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
     முன்னதாக, பிரதமர் மோடி, தன்னை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று பொய்யாக கூறிக் கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி விமர்சித்திருந்தார்.
     இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், சோனேபத்ராவில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:
     எனது ஜாதி தொடர்பாக எதிர்க்கட்சியினர் புதிதாக ஒரு விஷயத்தை கூறத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். இந்த மோடிக்கு ஒரே ஜாதிதான். ஏழை மக்களின் ஜாதி எதுவோ அதுவே எனது ஜாதி.
     உத்தரப் பிரதேசத்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள், மாநிலத்தை சீரழித்துவிட்டன. இப்போது அழிவிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக இரு கட்சிகளும் கைகோத்துள்ளன. அவர்களது கூட்டணி சந்தர்ப்பவாதமானது.
     மத்தியில் மூன்றாவது அணி ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் உளவு அமைப்புகள் வலுவிழக்க செய்யப்பட்டன. அந்த நிலையை, வாஜ்பாய் தலைமையிலான அரசே சரி செய்தது. நாட்டின் உளவு அமைப்புகள் மற்றும் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு நபர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்து இதனை அறிந்துகொள்ள முடியும். மத்தியில் "கலப்பட' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும் என்றார் அவர்.
     பொக்ரான் அணுகுண்டு சோதனை: ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் கடந்த 1998, மே 11-ஆம் தேதி அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதை நினைவு கூர்ந்து, பிரதமர் மோடி பேசியதாவது:
     21 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் "ஆபரேஷன் சக்தி' என்ற பெயரில் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது இந்தியா. தங்களது கடின உழைப்பால் நாட்டுக்கு வெற்றியைத் தேடி தந்த விஞ்ஞானிகளுக்கு தலைவணங்குகிறேன். அரசியல் துணிவு இருந்தால், தேசத்தின் பாதுகாப்புக்காக எதையும் செய்ய முடியும் என்பதற்கு சாட்சியாக இந்த வரலாற்று நிகழ்வு உள்ளது.
     வாஜ்பாயின் ஆட்சிக்குப் பிறகு, மன்மோகன் சிங் தலைமையில் வலுவற்ற அரசு அமைந்தது. "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயங்கிய அந்த அரசில், எண்ணற்ற ஊழல்கள் நடைபெற்றன. இதனால், நாட்டுக்கு அவப்பெயர் ஏற்பட்டது. எனினும், காங்கிரஸும், அதன் தலைவர்களும் குற்ற உணர்ச்சி சிறிதுமின்றி உள்ளனர். "நடந்தது நடந்துவிட்டது, அதற்கு என்ன' என்ற மனநிலையில் அவர்கள் உள்ளனர். இதுதான், காங்கிரஸ் கட்சியின் குணம்.
     ஒரு வலுவான அரசால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இந்திய விமானப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதல் சம்பவமே உதாரணமாகும். இது புதிய இந்தியா. பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களுக்குள் புகுந்து, அவர்களை அழிக்கும் ஆற்றலுடன் இந்தியா மாறியுள்ளது என்றார் பிரதமர் மோடி.
     கடந்த 1984-ஆம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த கலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா, "நடந்தது நடந்துவிட்டது, அதற்கு என்ன' என்று கூறியிருந்தார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
     ராஜஸ்தான் பாலியல் வன்கொடுமை சம்பவம்: இதனிடையே, காஜிப்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ராஜஸ்தானில் தலித் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை முன்வைத்து, அந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரûஸ விமர்சித்தார்.
     அல்வாரில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக கடந்த மாதம் 26-ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டும், மே 7-ஆம் தேதிதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலை மனதில் கொண்டு, இச்சம்பவத்தை மூடி மறைக்க காங்கிரஸ் அரசு முயற்சித்துள்ளதாக மோடி குற்றம்சாட்டினார்.
     இதுதொடர்பாக அவர் கூறுகையில், "ராஜஸ்தானில் கடந்த மாதம் 29, மே 6 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. இதை மனதில் கொண்டு, பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மூடி மறைக்க ஆளும் காங்கிரஸ் முயன்றுள்ளது. இந்த தேசத்தின் பெண்களுக்கு, காங்கிரஸால் நியாயம் தர முடியவில்லை' என்றார்.
     மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.72,000 நிதியுதவி அளிக்கும் "நியாய்' திட்டம் செயல்படுத்தப்படும் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இத்திட்டத்தின் பெயரைக் குறிப்பிட்டு, காங்கிரûஸ மோடி இவ்வாறு விமர்சித்துள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai