ஆந்திர சாலை விபத்தில் 14 பேர் பலி: பேருந்து-ஜீப் மோதல்

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் தனியார் பேருந்தும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 14 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் தனியார் பேருந்தும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 14 பேர் உயிரிழந்தனர்.
 இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
 உயிரிழந்தவர்கள் தெலங்கானா மாநிலம், கத்வால் மாவட்டத்தில் உள்ள ராமாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். திருமணத்துக்கு சென்றுவிட்டு ஜீப்பில் வீடு திரும்பியபோது விபத்து நேரிட்டுள்ளது. ஹைதராபாத் நகரிலிருந்து பெங்களூரு சென்றுகொண்டிருந்த பேருந்தில் இருந்த சில பயணிகள் லேசான காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
 ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
 ஆந்திர துணை முதல்வர் என்.சின்ன ராஜப்பா, கர்னூல் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் கே.ஃபகீரப்பாவை தொடர்பு கொண்டு விபத்து குறித்து கேட்டறிந்தார்.
 காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
 பிரதமர் மோடி இரங்கல்: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
 இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், "ஆந்திரத்தில் நேரிட்ட விபத்து துரதிருஷ்டவசமானதாகும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com