டைம் இதழில் மோடி குறித்த கட்டுரை: பாஜக கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி குறித்து டைம் இதழில் பிரிவினையின் தலைவர் என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் கட்டுரைக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து டைம் இதழில் பிரிவினையின் தலைவர் என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் கட்டுரைக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
 அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் வார இதழின் சர்வதேச பதிப்பின் அட்டைப் படத்தில் மோடியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. மோடி குறித்து 2 தலைப்பில் கட்டுரைகளும் வெளியாகியுள்ளன.
 அதில் ஒரு கட்டுரை, "பிரிவினையின் தலைவர்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. அந்த கட்டுரையை ஆதிஷ் தசீர் என்பவர் எழுதியுள்ளார். அவர் இந்திய பெண் பத்திரிகையாளர் தவ்லீன் சிங், மறைந்த பாகிஸ்தான் தொழிலதிபர் சல்மான் தசீர் ஆகியோரின் மகன் ஆவார்.
 இந்த கட்டுரைக்கு பாஜக தனது கண்டனத்தை சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா கூறியதாவது:
 கட்டுரையை எழுதியவர் பாகிஸ்தானியர். அவரிடம் நல்லது எதையும் எதிர்பார்க்க முடியாது. அப்படியிருக்கையில், அந்த கட்டுரையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சுட்டுரையில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதேபோல், கடந்த 2014ஆம் ஆண்டிலும் மோடியை விமர்சித்து பல்வேறு வெளிநாட்டு இதழ்களும் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.
 உண்மையில் பிரதமர் மோடி, அனைவரையும் ஒருங்கிணைப்பவர். நாட்டு நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அவர் கொண்டு வந்துள்ளார். அவரது சீர்திருத்த, செயல்படக் கூடிய, மாற்றம் ஏற்படுத்தக் கூடிய திட்டத்தின்கீழ் நமது நாடானது புதிய இந்தியாவாக மாறி வருகிறது.
 பிரதமர் மோடியை சித்து விமர்சித்திருப்பதை பாஜக கண்டிக்கிறது. இனவெறியுடனும், ஆபாசமாகவும் மனம்போன போக்கில் சித்து தொடர்ந்து பேசி வருகிறார்.
 அதேநேரத்தில் கடந்த 1984ஆம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிராக மூண்ட கலவரத்தை நியாயப்படுத்தியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவுக்கு சித்து கண்டனம் தெரிவிக்கவில்லை. சீக்கிய கலவரத்தில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்துக்கும் தொடர்பு உண்டு. அவரின் தூண்டுதலின்பேரிலேயே, மோடியை குறிவைத்து சித்து விமர்சித்து வருகிறார்.
 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வரும் 23ஆம் தேதி வெளியாகும்போது, காங்கிரஸ் கட்சியின் இத்தாலிய வண்ணம் மறைந்து விடும். அதன்பிறகு, தனது இத்தாலிய நிறத்துக்காக காங்கிரஸால் அதிக கர்வம் கொள்ள முடியாது என்றார் பத்ரா.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com