தேர்தலில் வாய்ப்பளிக்க கேஜரிவால் ரூ.6 கோடி லஞ்சம் பெற்றார்: ஆம் ஆத்மி வேட்பாளர் மகன் பரபரப்பு புகார்

மக்களவைத் தேர்தலில் மேற்கு தில்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதற்காக பல்பீர் சிங் ஜாக்கரிடம் முதல்வர் கேஜரிவால் ரூ.6 கோடி லஞ்சம் பெற்றதாக
தேர்தலில் வாய்ப்பளிக்க கேஜரிவால் ரூ.6 கோடி லஞ்சம் பெற்றார்: ஆம் ஆத்மி வேட்பாளர் மகன் பரபரப்பு புகார்

மக்களவைத் தேர்தலில் மேற்கு தில்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதற்காக பல்பீர் சிங் ஜாக்கரிடம் முதல்வர் கேஜரிவால் ரூ.6 கோடி லஞ்சம் பெற்றதாக ஜாக்கரின் மகன் உதய் ஜாக்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
 ஆம் ஆத்மியில் சில மாதங்களுக்கு முன்பு சேர்ந்த ஜாக்கருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டபோதே சலசலப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது இத்தகைய புகார் கிளம்பியுள்ளது.
 இது தொடர்பாக உதய் ஜாக்கார் சனிக்கிழமை அளித்த பேட்டி: எனது தந்தை ஊழலுக்கெதிரான அண்ணா ஹசாரேவின் இயக்கத்தில் பங்கேற்கவில்லை. ஆம் ஆத்மியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் அவர் சேர்ந்தார். ஆனால், மக்களவைத் தேர்தலில் மேற்கு தில்லியில் போட்டியிட அக்கட்சி அவருக்கு வாய்ப்பு வழங்கியது.
 அதற்காக அவர் கேஜரிவாலுக்கு ரூ.6 கோடி அளித்தார். அப்போது, கோபால் ராய் உடனிருந்தார். அரசியலில் ஈடுபடாத ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எனது தந்தையிடம் கேட்ட போது, லஞ்சம் கொடுத்ததை அவர் உறுதிப்படுத்தினார்.
 எனது கல்விக்காக பணம் கேட்டபோது அவர் வழங்க மறுத்தார். ஆனால், அந்தப் பணத்தை தனது அரசியல் லாபத்துக்காக அவர் வழங்கியுள்ளார். அந்தப் பணத்தை கொண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஜஷ்பால், சஜ்ஜன் குமார் ஆகியோரைப் பிணையில் எடுக்க செலவழிக்கவுள்ளதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார்.
 ஊழலற்ற அரசு அமைக்கவுள்ளதாக தெரிவித்து தில்லியில் ஆட்சியமைத்த கேஜரிவால், ரூ.6 கோடியை லஞ்சமாகப் பெற்ற விவகாரம் எனது மனச்சாட்சியை உறுத்தியது. அதனால்தான் இந்த விவகாரத்தை வெளியில் சொல்கிறேன் என்றார் உதய் ஜாக்கர்.
 பல்பீர் சிங் ஜாக்கர் மறுப்பு: இது தொடர்பாக அவரது தந்தை பல்பீர் சிங் ஜாக்கர் கூறுகையில், "எனது மனைவியை கடந்த 2009-இல் விவாகரத்து செய்துவிட்டேன். எனது மகன் மனைவியின் குடும்பத்தினருடன்தான் உள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக மகன் என்னுடன் இல்லை. நாங்கள் அரிதாகத்தான் பேசிக் கொள்வோம்.
 அரசியல் தொடர்பாக மகனுடன் எந்த நிலையிலும் நான் பேசிக் கொள்ளவில்லை. இந்தக் குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன்' என்றார்.
 நடவடிக்கை வேண்டும்-பாஜக: இந்த விவகாரம் துகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் விஜய் கோயல், பாஜகவின் மூத்த தலைவர் விஜேந்தர் குப்தா ஆகியோர் கூறுகையில், "ஆம் ஆத்மியின் மேற்கு தில்லி வேட்பாளரின் மகனே, கேஜரிவாலுக்கு தனது தந்தை ரூ.6 கோடியை லஞ்சமாகக் கொடுத்தார் எனக் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் தில்லி காவல் துறையும், வருமான வரித் துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
 மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், "தந்தை மீது மகனே குற்றம்சாட்டும் இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. இது தொடர்பாக கேஜரிவால் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும்' என்றார்.
 அகில இந்திய வணிகர்களின் கூட்டமைப்பின் செயலரும், தில்லி பாஜகவின் முன்னாள் பொருளாளருமான பிரவீண் கண்டேல்வால் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தில்லி முதல்வர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது.
 தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு கேஜரிவால், பல்பீர் சிங் ஜக்கார், கோபால் ராய், உதய் ஜக்கார் ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
 தேர்தல் ஆணையத்தில் காவல்துறை புகார்: முன்னதாக, உதய் ஜாக்கரின் குற்றச்சாட்டை மறுத்து விளக்கமளிக்க ஆம் ஆத்மி கட்சி நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு, தேர்தல் நடத்தை நெறிமுறைகளுக்கு எதிரானது என்று தில்லி தலைமை தேர்தல் அலுவலகத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
 வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேர அமைதிக்காலம் அமலில் உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை நடத்தியுள்ளதாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
 செய்தியாளர்கள் சந்திப்பை நிறுத்தக் கோரியும் கேட்காத ஆம் ஆத்மி கட்சியினர், அதை காணொலியாக பதிவு செய்ய முயன்றபோது அந்த அறையின் கதவுகளை மூடி தடை ஏற்படுத்தியதாக காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 ஆம் ஆத்மி குற்றச்சாட்டு: இதனிடையே, பாஜக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தும்போது, அவர்களிடம் இவ்வாறு விதிகளை கடைப்பிடிக்குமாறு காவல்துறை ஏன் கூற மறுக்கிறது என்று ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளது.
 மேலும், தாங்கள் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியதன் மூலம் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மீறப்படவில்லை என்றும், சந்திப்பின்போது தங்களது சின்னத்தை முற்றிலுமாக மறைத்திருந்ததாகவும், எந்த நிலையிலும் தங்களுக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் அப்போது கோரவில்லை என்றும் ஆம் ஆத்மி விளக்கமளித்துள்ளது.
 அத்துடன், இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தக் கூடாது என்றால், அதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ உத்தரவை காவல்துறை பெற்று வந்திருக்க வேண்டும் என்றும் அக்கட்சி கூறியது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com