விதிகளை மீறி கருத்துக் கணிப்பு: ஆம் ஆத்மிக்கு எதிராக தேர்தல் அலுவலகத்தில் காங்கிரஸ் புகார்

தில்லியில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்கான அவகாசம் முடிந்த பிறகும், விதிகளை மீறி ஆம் ஆத்மி கட்சி தேர்தல் கருத்துக் கணிப்பு போன்று தொலைபேசி வாயிலாக பிரசாரம் மேற்கொள்வதாக

தில்லியில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்கான அவகாசம் முடிந்த பிறகும், விதிகளை மீறி ஆம் ஆத்மி கட்சி தேர்தல் கருத்துக் கணிப்பு போன்று தொலைபேசி வாயிலாக பிரசாரம் மேற்கொள்வதாக தில்லி தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
 தில்லி காங்கிரஸ் தலைவரும், வட கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஷீலா தீட்சித் அந்தப் புகாரை அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
 தில்லி மக்கள் பலருக்கு குறிப்பிட்ட இரு தொலைபேசி எண்களிலிருந்து அழைப்புகள் வருகின்றன. அதில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட தானியங்கி குரல் ஒலிக்கிறது.
 தேர்தல் கருத்துக் கணிப்பு என்ற வகையில் பேசும் அந்தக் குரல், தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு 47 சதவீதம், பாஜகவுக்கு 37 சதவீதம், காங்கிரஸுக்கு 11 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்று கூறுகிறது. பிரசாரம் ஓய்ந்த பிறகு, இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்படுவது தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறுவதாக உள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி மீதும், சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்பு மையம் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என ஷீலா தீட்சித் தனது புகாரில் கேட்டுக்கொண்டுள்ளார்.
 ஆம் ஆத்மி மீது விமர்சனம்: இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மியை விமர்சித்துள்ள காங்கிரஸ், "மக்களை முட்டாளாக்க நினைப்பவர்கள், விரைவில் முட்டாளாக்கப்படுவர்' என்று கூறியுள்ளது.
 இதுதொடர்பாக தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
 மாற்று அரசியலை முன்வைத்து அரசியலுக்கு வந்த கட்சி, எப்போதும் செய்தியில் இடம் பெற வேண்டும் என நினைக்கிறது. அரசியலில் சில நேரம் பொழுதுபோக்கும் தேவைதான் என்றாலும், எப்போதுமே பொழுதுபோக்கு அரசியலில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
 தில்லியில் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமை முடிவடைந்த பிறகும், தொலைபேசி வாயிலாக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பிரசாரம் செய்யப்பட்டு வருவது ஜனநாயக விரோத செயலாகும்.
 ஆம் ஆத்மி புதிய கட்சி என்றும் பாராமல், நாட்டின் தலைநகர் தில்லியை ஆள்வதற்கு மக்கள் வாய்ப்பளித்தனர். அளித்த வாய்ப்பை அக்கட்சி பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது. மக்களை முட்டாளாக்க நினைப்பவர்கள் விரைவில் முட்டாளாக்கப்படுவர். தில்லி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கும், பாஜகவுக்குமே போட்டி உருவாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி கட்சி இல்லை என்றார் அவர்.
 பேட்டியின் போது, கட்சியின் மூத்த தலைவர்கள் ரமாகாந்த் கோஸ்வாமி, சந்தீப் தீட்ஷித் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com