சுடச்சுட

  

  "பானி' புயல் பாதிப்பு: ஒடிஸாவின் பல இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 13th May 2019 02:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒடிஸாவை பானி புயல் தாக்கி 9 நாள்கள் ஆன பிறகும், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி சீரமைக்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள், மாநிலத் தலைநகரம் புவனேசுவரம் உள்பட பல்வேறு இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   ஒடிஸாவின் புரி பகுதியில் கடந்த 3ஆம் தேதி பானி புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் நூற்றுக்கணக்கான வீடுகளின் கூரைகள் தூக்கியெறியப்பட்டன. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்சாரக் கம்பங்கள் முறிந்து விழுந்தன.
   பானி புயலால், ஒடிஸாவின் 14 மாவட்டங்களில் உள்ள 14,000 கிராமங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. புயலுக்கு 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் மின்சாரம், குடிநீர் வசதிகள், தொலைத் தொடர்பு சேவை ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவற்றை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகின்றன. அதேபோல், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில், மாநில அரசு ரூ.1,600 கோடி அறிவித்துள்ளது.
   இருப்பினும், புயலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் இயல்பு நிலை திரும்பவில்லை. மின்சாரம் இன்றி பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன. குடிநீர் இன்றி மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், புவனேசுவரம் உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
   புவனேசுவரத்தில் உள்ள சமந்திராபூர், லிங்கிபூர், நவ்கோன் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதியை விரைந்து சீரமைத்து தரும்படி மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் புவனேசுவரம்-புரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
   இதே கோரிக்கையை முன்வைத்து, ஜெகந்த்சிங்பூர்-மாசாகோன் சாலையின் சில இடங்களில் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டாக் மற்றும் குர்தா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   பானி புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட புரியில் வசிக்கும் மக்கள், தாற்காலிகமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். மின்சாரம் சீரமைக்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள், மின்சார வாரிய அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுவதால் அந்த அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
   அதேநேரத்தில், தகவல் மற்றும் பொது மக்கள் தொடர்புத் துறை செயலர் சஞ்சய் சிங், புவனேசுவரத்தில் வரும் திங்கள்கிழமைக்குள் மின்சாரம் மீண்டும் அளிக்கப்பட்டு விடும் என தெரிவித்துள்ளார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai