சுடச்சுட

  
  Rahul_Gandhi_AP

  மக்களவைத் தேர்தலில் அன்பே வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
   மக்களவைத் தேர்தலையொட்டி, புது தில்லி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஒளரங்கசீப் லேனில் உள்ள நகர் பாலிகா இருபாலர் பள்ளியில் தனது வாக்கை ராகுல் காந்தி பதிவு செய்தார்.
   பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அதிக அளவில் வெறுப்பைப் பயன்படுத்தினார். ஆனால், காங்கிரஸ் கட்சியோ அன்பைப் பயன்படுத்தியது. தேர்தலின் இறுதியில் அன்பே வெற்றி பெறப் போகிறது.
   வேலையின்மை, விவசாயிகளின் நிலை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, ஊழல், ரஃபேல் விவகாரம் ஆகிய பிரச்னைகளும் மக்களவைத் தேர்தலில் பேசப்பட்டன' என்றார்.
   பேட்டியின் போது, புது தில்லி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மாக்கன் உடனிருந்தார்.
   "பாஜக தோல்வி உறுதி': மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியுறப் போவது நிச்சயம் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா தெரிவித்தார்.
   மக்களவைத் தேர்தலையொட்டி, புது தில்லி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட லோதி எஸ்டேட்டில் உள்ள சர்தார் படேல் பள்ளியில் பிரியங்கா வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "நாட்டின் நலனுக்காக மக்களாட்சியைக் காக்க நாம் போராடி வருகிறோம். இதை மனதில் வைத்து வாக்களித்தேன்.
   பாஜக ஆட்சி மீது மக்கள் கோபத்துடனும், ஏமாற்றத்துடனும் உள்ளனர். எனவே, அவர்களின் உணர்வுகளை வாக்குகள் மூலம் தெரியப்படுத்துவர். இதனால், மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியுறப் போவது நிச்சயம். மக்களின் கோபத்தை, குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் பார்த்தேன்.
   மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து பிரதமர் விவாதிப்பதற்குப் பதிலாக, ஏதேதோ பேசி வருகிறார்' என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai