தேசத்தின் ஆன்மிக பாரம்பரியத்தை சீரழிக்க காங்கிரஸ் சதி

"ஹிந்து பயங்கரவாதம்' என்ற பிரசாரத்தின் மூலம் நாட்டின் ஆன்மிக பாரம்பரியத்தை சீரழிக்க காங்கிரஸ் சதி செய்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
தேசத்தின் ஆன்மிக பாரம்பரியத்தை சீரழிக்க காங்கிரஸ் சதி

"ஹிந்து பயங்கரவாதம்' என்ற பிரசாரத்தின் மூலம் நாட்டின் ஆன்மிக பாரம்பரியத்தை சீரழிக்க காங்கிரஸ் சதி செய்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
 மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மோடி பேசியதாவது:
 "ஹிந்து பயங்கரவாதம்' என்ற பிரசாரத்தின் மூலம் நமது தேசத்தின் ஆன்மிக பாரம்பரியத்தை சீரழிக்க காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சதி செய்து வருகிறது. எதிர்க்கட்சிகள் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும் சரி, அத்துமீறல்களில் ஈடுபட்டாலும் சரி அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். புனிதமான ஹிந்து மதத்தின் நிறமான காவியின் மீது பயங்கரவாதம் என்ற சேற்றை வாரி இறைக்கும் அவர்கள், தாங்கள் செய்த பாவத்தில் இருந்து தப்ப முடியாது.
 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வன்முறையைத் தூண்டிவிட்டது. அதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இது தொடர்பாக கேள்வி எழுப்பினால், "நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம்' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் (சாம் பிட்ரோடா) கருத்துக் கூறுகிறார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சி மக்களின் உயிர் விஷயத்தில் எந்த அளவுக்கு அசட்டையாக நடந்து கொள்கிறது என்பதும், அவர்களது மனப்போக்கு என்ன என்பதும் தெரியவருகிறது.
 அடுத்து போபால் விஷவாயு சம்பவத்தில் குற்றவாளியை (வாரன் ஆண்டர்சன்) ஏன் தப்பவிட்டீர்கள் என்று கேள்வி கேட்டால், அதற்கும் இதேபோன்ற பதிலை காங்கிரஸ் தலைவர்கள் அளிப்பார்கள்.
 கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளையும், நாட்டின் பாதுகாப்பை எந்த அளவுக்கு உறுதி செய்துள்ளோம் என்பதையும் முன்வைத்து பாஜக பிரசாரம் செய்து வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பொய்ப் பிரசாரம் மற்றும் அவதூறான கருத்துகளை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. நிர்வாகத்தில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, தேசநலன் சார்ந்த விஷயங்களில் துரிதமான முடிவெடுப்பது, மக்கள் நலனை முதன்மையாகக் கொள்வது ஆகியவையே பாஜக அரசின் கொள்கையாக இருந்து வருகிறது. நாட்டில் வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுக்கவும், தேசப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார் மோடி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com