நொய்டாவில் 1,818 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

உத்தரப் பிரதேச மாநிலம் கிரெட்டர் நொய்டாவில் 1,818 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கிரெட்டர் நொய்டாவில் 1,818 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் ஒரே இடத்தில் இவ்வளவு அதிகமான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல்முறை. இதன் மதிப்பு ரூ.1,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று அதனைக் கைப்பற்றிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இது தொடர்பாக நைஜீரியாவைச் சேர்ந்த இருவரும், தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேச அளவில் ஒரே இடத்தில் இந்த அளவுக்கு அதிகமாக போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதும் இதுவே முதல்முறையாகும்.
 இது தொடர்பாக அதிகாரிகள் மேலும் கூறுகையில், "தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண், அந்நாட்டுக்குச் செல்வதற்காக தில்லி விமான நிலையத்துக்கு வருகிறார்; அவருக்கு போதைப் பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்படி, அப்பெண் கொண்டு வந்த பைகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில் 24.7 கிலோ போதைப் பொருள் இருந்தது.
 இதையடுத்து, அவரைக் கைது செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு 1,818 கிலோ போதைப் பொருள் இருந்தது. அதனைக் கைப்பற்றிய அதிகாரிகள், அங்கிருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இருவரையும், தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்தனர்' என்றனர்.
 போதைப் பொருள் கும்பல் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அந்த வீட்டில் தங்கியிருந்துள்ளது. அந்த வீடு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவில் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரிக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இணையதள நிறுவனம் மூலம் அந்த வீட்டை வாடகைக்கு விட்டதாகவும், தான் நேரடியாக அங்கு வரவில்லை என்றும் அந்த அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com