பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டுமா? எதிர்க்கட்சிகளுக்கு மோடி கேள்வி

பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் பாதுகாப்புப் படையினர் அனுமதி பெற வேண்டுமா? என்று எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கேள்வியெழுப்பியுள்ளார்.
பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டுமா? எதிர்க்கட்சிகளுக்கு மோடி கேள்வி

பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் பாதுகாப்புப் படையினர் அனுமதி பெற வேண்டுமா? என்று எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கேள்வியெழுப்பியுள்ளார்.
 உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகர் மற்றும் தேவ்ரியா ஆகிய இடங்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மோடி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தபோது, இதுகுறித்து அவர் கூறியதாவது:
 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைவது உறுதி. ஏனெனில், தேர்தலில் மக்கள் செயல்படக் கூடிய மற்றும் நேர்மையான அரசுக்கே வாக்களித்துள்ளனர்.
 உத்தரப் பிரதேச முதல்வராக அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் பதவி வகித்த காலத்தைக் காட்டிலும், குஜராத் முதல்வராக அதிக காலம் நான் பதவி வகித்துள்ளேன். ஆனால் என் மீது எந்த ஊழல் கறையும் கிடையாது. அப்படிப்பட்ட என்னிடம், இவர்கள் ஜாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள்.
 ஜாதி அரசியலில் நான் ஈடுபட்டது கிடையாது. மக்களின் ஆசி எனக்கு இருப்பதால், ஜாதி அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியம் எப்போதும் ஏற்படாது. இருப்பினும், என்னுடைய ஜாதிச் சான்றிதழை அவர்கள் கேட்டுவருவதால், இதை தெரிவிக்கிறேன். நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியில் பிறந்தவன். ஆனால், உலகின் தலைமையிடமாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது கனவாகும்.
 அதிகார துஷ்பிரயோகம் செய்ததில்லை: நான் ஏழை ஜாதி. எனது ஒரே அடையாளம், ஏழை என்பதுதான். வறுமையை நான் எதிர்கொண்டுள்ளேன்; அதனால் வேதனைப்பட்டுள்ளேன்; பிறகு வறுமையில் இருந்து மீண்டு வெளியே வந்துவிட்டேன். அதே ஏழை மக்களின் ஆசீர்வாதத்தால், நாட்டுக்கு சேவையாற்றும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. குஜராத் முதல்வராக நீண்டகாலம் இருந்தேன். அப்படிப்பட்ட எனக்கு பிரதமர் பதவியை மக்கள்தான் அளித்தனர்.
 எனது பதவியையும், ஆட்சி அதிகாரத்தையும் நானோ அல்லது எனது குடும்பமோ துஷ்பிரயோகம் செய்தது கிடையாது. எனது குடும்பத்தை வசதி படைத்த குடும்பமாக மாற்றவும் இல்லை. எனது பதவியை ஏழை மக்களுக்கு சேவை செய்யவும், அவர்களின் நலன்களுக்காகவுமே பயன்படுத்தியுள்ளேன். என்னிடம் ஜாதிச் சான்றிதழ் கேட்கும் நபர்களோ, ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்துக்காகவும் பெரும் சொத்துகளை சேர்த்துக் கொண்டனர்.
 ராஜஸ்தான் அரசுக்கான ஆதரவை மாயாவதி வாபஸ் பெற வேண்டும்: அல்வாரில் தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி முதலைக் கண்ணீர் வடிக்கிறார். இந்த சம்பவத்தை தீவிரமான பிரச்னையாக அவர் கருதினால், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை அவர் ஏன் திரும்ப பெறவில்லை? தலித் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட சம்பவத்தை அந்த மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசும் மூடி மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. இதுவே மகா கூட்டணி அரசின் மோசமான ஆட்சிக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும். "நியாயம்' குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகிறார். ஆனால் அல்வார் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்காமல் அவர் மௌனமாக இருக்கிறார். லக்னௌவில் நடைபெற்ற விருந்தினர் மாளிகை இல்ல சம்பவத்துக்காக (மாயாவதி தொடர்புடைய சம்பவம்) ஒட்டுமொத்த நாடும் வேதனைப்பட்டது. ஆனால், அல்வார் சம்பவத்துக்கு மாயாவதி வேதனைப்படாமல் இருப்பதற்கு என்ன காரணம் உள்ளது? தலித் பெண் குழந்தைகளின் கண்ணியத்துக்கு அதிக மதிப்பு அளித்தால், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை மாயாவதி வாபஸ் பெற வேண்டும்.
 ஜம்மு-காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை (மே12) நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த சம்பவத்தை கண்டு சிலர் அமைதி இழந்துவிட்டனர். இன்று தேர்தல் நடக்கும் நிலையில், பயங்கரவாதிகளை மோடி ஏன் கொல்கிறார் என கேட்கிறார்கள். துப்பாக்கிகளுடன் பயங்கரவாதிகள் நிற்கும் நிலையில், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தலாமா? வேண்டாமா என்று தேர்தல் ஆணையத்திடம் வீரர்கள் அனுமதி கேட்க வேண்டுமா? தேர்தல் நடக்கும் நிலையில், பயங்கரவாதிகள் மீது பாதுகாப்புர் படையினர் தாக்குதல் நடத்துகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை தருகிறது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் என்ன வகையிலான நாடகத்தில் ஈடுபட்டுள்ளனர்?
 வாக்குகளைப் பிரிக்கும் கட்சியாகிவிட்டது காங்கிரஸ்: இந்தக் காவலன் மீது நாட்டு மக்கள் அளவுக்கு அதிகமாக அன்பு வைத்திருப்பது குறித்து எதிர்க்கட்சிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனில், பாஜகவுக்கும் இந்த மோடிக்கும் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும். இந்தியா வீழ்ச்சியடைய போகிறது என்று அச்சுறுத்தல் விடுப்பவர்கள், தேர்தலில் தோல்வியை உணரத் தொடங்கிவிட்டனர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நமது வீரர்களின் தலைகள் பயங்கரவாதிகளால் துண்டிக்கப்பட்டன. அக்கட்சி தற்போது வாக்குகளைப் பிரிக்கும் கட்சியாகிவிட்டது என்றார் மோடி.
 தேசத்தின் ஆன்மிக பாரம்பரியத்தை சீரழிக்க சதி: மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மோடி பேசியதாவது:
 "ஹிந்து பயங்கரவாதம்' என்ற பிரசாரத்தின் மூலம் நமது தேசத்தின் ஆன்மிக பாரம்பரியத்தை சீரழிக்க காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சதி செய்து வருகிறது. எதிர்க்கட்சிகள் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும் சரி, அத்துமீறல்களில் ஈடுபட்டாலும் சரி அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். புனிதமான ஹிந்து மதத்தின் நிறமான காவியின் மீது பயங்கரவாதம் என்ற சேற்றை வாரி இறைக்கும் அவர்கள், தாங்கள் செய்த பாவத்தில் இருந்து தப்ப முடியாது.
 முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வன்முறையைத் தூண்டிவிட்டது. அதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இது தொடர்பாக கேள்வி எழுப்பினால், "நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம்' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் (சாம் பிட்ரோடா) கருத்துக் கூறுகிறார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சி மக்களின் உயிர் விஷயத்தில் எந்த அளவுக்கு அசட்டையாக நடந்து கொள்கிறது என்பதும், அவர்களது மனப்போக்கு என்ன என்பதும் தெரியவருகிறது.
 அடுத்து போபால் விஷவாயு சம்பவத்தில் குற்றவாளியை (வாரன் ஆண்டர்சன்) ஏன் தப்பவிட்டீர்கள் என்று கேள்வி கேட்டால், அதற்கும் இதேபோன்ற பதிலை காங்கிரஸ் தலைவர்கள் அளிப்பார்கள்.
 கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளையும், நாட்டின் பாதுகாப்பை எந்த அளவுக்கு உறுதி செய்துள்ளோம் என்பதையும் முன்வைத்து பாஜக பிரசாரம் செய்து வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பொய்ப் பிரசாரம் மற்றும் அவதூறான கருத்துகளை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. நிர்வாகத்தில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, தேசநலன் சார்ந்த விஷயங்களில் துரிதமான முடிவெடுப்பது, மக்கள் நலனை முதன்மையாகக் கொள்வது ஆகியவையே பாஜக அரசின் கொள்கையாக இருந்து வருகிறது. நாட்டில் வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுக்கவும், தேசப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார் மோடி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com