Enable Javscript for better performance
சீக்கிய கலவர சர்ச்சை கருத்துக்கு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்: பிட்ரோடாவுக்கு ராகுல் மீண்டும் வல- Dinamani

சுடச்சுட

  

  சீக்கிய கலவர சர்ச்சை கருத்துக்கு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்: பிட்ரோடாவுக்கு ராகுல் மீண்டும் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 14th May 2019 01:21 AM  |   அ+அ அ-   |    |  

  ragul


  சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்துகளுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா வெட்கப்பட வேண்டும். இதற்காக, நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
  கடந்த 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இருவரும் சீக்கியர்கள் என்பதால், தில்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர்.
  இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக, சாம் பிட்ரோடாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நடந்தது நடந்து விட்டது; அதனால் இப்போது என்ன என்று பதிலளித்தார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதைத் தேர்தல் பிரசாரங்களில் குறிப்பிட்டு, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் பிட்ரோடாவின் கருத்துக்காக மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது.
  இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியாணா மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
  பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டதும் பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான முடிவுகளாகும். இதனால், லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். அன்றாடச் செலவுகளுக்குக் கூட மக்கள் பணம் இல்லாமல் தவித்தனர்.
  கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலின்போது அளித்த விவசாயப் பொருள்களுக்குத் தகுந்த விலை நிர்ணயம் செய்யப்படும், மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் போன்ற வாக்குறுதிகள் எதையும் பிரதமர் நரேந்திர மோடி அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், இவை குறித்து ஒருவார்த்தை கூட அவர் இப்போது பேசுவதில்லை.
  விவாதத்துக்குத் தயாரா?: ஆரம்பத்தில் ஊழல் குறித்து மோடி பேசினார். ஊழல் குறித்து விவாதம் நடத்த அவருக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால், அவர் அதற்குத் தயாராக இல்லை. இப்போதும் அவருக்கு சவால் விடுகிறேன். ரஃபேல் ஒப்பந்த ஊழல் குறித்து என்னுடன் விவாதம் நடத்த நீங்கள் (பிரதமர் மோடி) தயாரா? அவரிடம் நான் நான்கு கேள்விகள் தான் கேட்பேன்; அவரால் நிச்சயம் பதில் கூற முடியாது; நாட்டு மக்கள் முன் அவமானப்பட்டு நிற்பார்.
  மன்மோகன் சிங்குக்குப் பாராட்டு: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டமான நியாய் மூலம், மாதத்துக்கு ரூ.12,000க்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கப்படும். இதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகி, நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும். இளைஞர்களும், வணிகர்களும் இத்திட்டத்தால் பெரிதும் பயனடைவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிறைவேற்றிய பொருளாதாரத் திட்டங்களை அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூட பாராட்டியுள்ளார்.
  சீக்கிய கலவரம் தொடர்பாக, பிட்ரோடா கூறிய கருத்துகள் முற்றிலும் தவறானவை. அவ்வாறு கூறியதற்காக அவர் வெட்கப்பட வேண்டும். இந்தக் கருத்துகளுக்காக நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கோர வேண்டும். இதை நான் வெளிப்படையாகவே கூறுகிறேன். இதை அவரிடம் தொலைபேசி மூலமும் கூறிவிட்டேன் என்றார் ராகுல் காந்தி.
  இந்தப் பிரசாரக் கூட்டத்தில் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கும் பங்கேற்றார். சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு ஏற்கெனவே மறுப்பு தெரிவித்திருந்த ராகுல், அவரது கருத்தில் காங்கிரஸுக்கு உடன்பாடில்லை என சுட்டுரையில் பதிவிட்டிருந்தார்.
   

  kattana sevai