சுடச்சுட

  

  டிஎன்இஆர்சி உறுப்பினர் நியமன விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

  By DIN  |   Published on : 14th May 2019 01:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிஎன்இஆர்சி)  உறுப்பினர் நியமன விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள  மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
  இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த நிர்மல் குமார்,  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாடு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் ஓர் உறுப்பினர் ஓய்வு பெற்ற நிலையில், அவரது இடத்துக்கு புதிய உறுப்பினரைத் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. அந்தக் காலிப் பணியிடத்துக்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரை  நியமிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
  இதேபோல, மின்வாரிய ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் உறுப்பினரான சென்னையைச் சேர்ந்த நாகல்சாமி என்பவரும் இந்த வழக்கில் தன்னை எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
  இந்த மனு  சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை  கிளையில் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நாகல்சாமி,  2014-இல் தமிழக மின்வாரியத்துடன் ஒழுங்குமுறை ஆணையம் சில ஒப்பந்தங்களை மேற்கொண்டது. அந்த ஒப்பந்தங்கள் 15 ஆண்டுகளுக்கு போடப்பட்டன. அதனால், மின் வாரியத்திற்கு ரூ.65 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் அதை நான் ஏற்கவில்லை. மற்ற இரு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்ததால் அந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றார்.  இதையடுத்து, இந்த விவகாரத்தில் தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் எந்த முடிவுகளையும் எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
  இதனிடையே, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 8-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஏப்ரல் 22-இல் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரத்தில் எவ்வித இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தனர்.
  இந்நிலையில்,  உச்சநீதிமன்ற கோடைக்கால விடுமுறை அமர்வு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் முன்னிலையில், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீநிவாசன், வழக்குரைஞர் பா. வினோத் கண்ணா உள்ளிட்டோர் திங்கள்கிழமை ஆஜராகி, இந்த மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.  அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக விடுமுறைக் கால அமர்வில் முறையிடுமாறு நீதிபதிகள் முன்பு அறிவுறுத்தியதைக் வழக்குரைஞர்கள் குறிப்பிட்டனர். இதைத் தொடர்ந்து,  இந்த மனுவை விசாரிப்பதற்கு என்ன அவரசம் உள்ளது என வினவிய நீதிபதிகள்,  மனுவை அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai