அல்வார் சம்பவம்: மோடியின் குற்றச்சாட்டுக்கு அசோக் கெலாட் பதிலடி

ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் தலித் பெண் ஒருவர், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில், தனது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை மறைத்து, வேண்டுமென்றே
அல்வார் சம்பவம்: மோடியின் குற்றச்சாட்டுக்கு அசோக் கெலாட் பதிலடி


ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்தில் தலித் பெண் ஒருவர், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில், தனது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை மறைத்து, வேண்டுமென்றே பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டுகிறார் என்று அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் பெண் ஒருவர், தனது கணவர் கண்ணெதிரே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். 
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநிலத்தில் ஆளும் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், அந்த சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறது என்று பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அசோக் கெலாட் திங்கள்கிழமை கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி பல முறை என்னை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியுள்ளார். அல்வார் சம்பவத்தில் எனது தலைமையிலான அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று மோடி குற்றம்சாட்டுகிறார். ஆனால் இந்த விவகாரத்தில் மாநில அரசு ஏற்கெனவே பல நடவடிக்கைகளை எடுத்துவிட்டது. இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். சம்பவம் நடந்த இடத்துக்கு உள்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முயற்சித்து வருகிறது.
இந்த உண்மைகளை மறைத்து, மோடி என் மீது குற்றம்சாட்டி மக்களை தவறாக வழிநடத்த எண்ணுகிறார் என்று கூறினார்.
பெண்கள் பாதுகாப்புக்கு புதிய பதவி: இந்நிலையில், பெண்களின் பாதுகாப்புக்கென தனியாக மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் பதவி உருவாக்கப்படும் என அசோக் கெலாட் தெரிவித்தார். 
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,  ராஜஸ்தானில் கடந்த 2017-ஆம் ஆண்டு மட்டும் 3, 305 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதுவே 2018-ஆம் ஆண்டில், 4, 335 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
அதனால், பெண்களின் பாதுகாப்புக்கென தனியாக ஒரு பதவி உருவாக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு துணை கண்காணிப்பாளர் நியமிக்கப்படுவார். அந்த அதிகாரி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவார்.
காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பெண்களை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல் நிலைய ஆய்வாளர் புகாரை பதிவு செய்யவில்லையென்றால், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண்கள் புகார் அளிக்கலாம்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேலும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார் அசோக் கெலாட்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com