கர்தார்பூர் வழித்தடம் குறித்து தேர்தலுக்குப் பிறகு பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் எதிர்பார்ப்பு

இந்தியாவில் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, கர்தார்பூர் வழித்தடம் தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கலாம் என பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாக அந்நாட்டு


இந்தியாவில் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, கர்தார்பூர் வழித்தடம் தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கலாம் என பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாக அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ், தனது வாழ்நாளில் ஏறத்தாழ 18 ஆண்டுகளைத் தற்போதைய பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அவரது நினைவாக எழுப்பப்பட்ட தர்பார் சாஹிப் குருத்வாரா, சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து ஏறத்தாழ 3 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது.
அந்த குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் நுழைவுஇசைவு (விசா) இன்றி புனிதப்பயணம் மேற்கொள்ள வசதியாக இந்தியாவின் குருதாஸ்பூரையும், கர்தார்பூரையும் இணைக்கும் வகையிலான வழித்தடத்துக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி இந்தியப் பகுதியிலும், நவம்பர் 28-ஆம் தேதி பாகிஸ்தான் பகுதியிலும் அடிக்கல் நாட்டப்பட்டது. வழித்தடத்தை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர், பாதுகாப்புப் படையினர் மீது கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நிகழ்த்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் அமைந்துள்ள அந்த அமைப்பின் முகாம்களைக் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி இந்திய விமானப்படையினர் தாக்கி அழித்தனர்.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டுப் போர் விமானங்களும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால், அதை இந்திய விமானப்படையினர் முறியடித்தனர். இதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது. இதனால், கர்தார்பூர் வழித்தடத் திட்டம் நிறைவேற்றப்படுவதில் சுணக்கநிலை ஏற்பட்டது.
இத்திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தரப்பில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் காலிஸ்தான் தனி நாடு கோரும் பிரிவினைவாதிகள் அதிகம் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. இதனால், கடந்த ஏப்ரல் மாதம் இரு நாட்டுக் குழுக்களுக்கும் இடையே நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. 
இந்நிலையில், பாகிஸ்தான் அதிகாரிகளை மேற்கோள்காட்டி, அந்நாட்டு பத்திரிகை எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் வெளியிட்டுள்ள செய்தியில், கர்தார்பூர் வழித்தடம் அமைப்பதில் பாகிஸ்தான் எந்த காலதாமதமும் செய்யவில்லை. இந்த விவகாரத்தில் ஈடுபாடு காட்ட இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்தபின், புதிய அரசு பதவியேற்றபிறகு, கர்தார்பூர் வழித்தடத் திட்ட ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் என பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com