பிரசாரம்தான் நடந்தது; வேலை நடக்கவில்லை: மத்திய அரசு மீது பிரியங்கா தாக்கு

5 ஆண்டுகால மோடி அரசின் ஆட்சியில் விளம்பர பிரசாரம்தான் நடைபெற்றது; வேலை எதுவும் நடக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதி பொதுச் செயலாளர் பிரியங்கா
மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலில் வழிபட்ட பிரியங்கா.
மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலில் வழிபட்ட பிரியங்கா.


5 ஆண்டுகால மோடி அரசின் ஆட்சியில் விளம்பர பிரசாரம்தான் நடைபெற்றது; வேலை எதுவும் நடக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதி பொதுச் செயலாளர் பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், ரட்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இதுகுறித்து பிரியங்கா பேசியதாவது:
தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பொதுவாக தலைவர்கள், நிகழ்கால பிரச்னைகள் குறித்துதான் பேசுவார்கள். அதாவது மக்களிடம் என்ன பிரச்னை இருக்கிறது என கேட்பார்கள். அதை எப்படி சரி செய்ய முடியும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு என்ன பணிகளை செய்ய போகிறோம், கடந்த 5 ஆண்டுகளாக என்ன பணிகளை செய்தோம் என்றுதான் தெரிவிப்பார்கள்.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக மோடி அரசின் ஆட்சியில், விளம்பர பிரசாரம்தான் நடைபெற்றது; எந்த வேலையும் நடக்கவில்லை.
பாஜகவின் பிரசாரத்துக்கும், கள நிலவரத்துக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. காங்கிரஸ் கட்சியால் மட்டும்தான் வாக்குறுதிகளை செயல்படுத்த முடியும்.
விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பலவீனமான மக்களை துறவி பிரதமர் காப்பாற்ற மாட்டார். மத்திய அரசின் அகந்தை தற்போது மிகவும் அதிகரித்து விட்டது. தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும்தான் மக்களை காண்பதற்கு மோடி வருகிறார். தனது சொந்த தொகுதியான வாராணசியில் உள்ள ஏழை குடும்பம் அல்லது விவசாய குடும்பத்தின் வீட்டுக்கு சென்று, அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு எடுத்த நடவடிக்கை குறித்து தெரிவிக்க கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடிக்கு 5 நிமிடம் கூட கிடைக்கவில்லை.
தேர்தல் பிரசாரத்தின்போது மிகப்பெரிய அளவில் பேசும் மோடி, தனது அரசால் செயல்படுத்த முடியாமல் போன வாக்குறுதிகள் குறித்து எதுவும் தெரிவிப்பதில்லை. 
பொய்யை மக்கள் நம்பச் செய்யும் முயற்சி நடக்கிறது. அரசியல் ரீதியில் மட்டும்தான் மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அரசியல்வாதிகள் அனைவரும் மக்களால்தான் உருவாக்கப்பட்டனர். ஆதலால் மக்கள் தங்களது பலத்தை உணர முயற்சிக்க வேண்டும். வாக்குகள் மிகவும் முக்கியமானவை. அதை தேர்தலில் மக்கள் வீணாக்கி விடக் கூடாது.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை இழந்து விட்டனர். பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தால், குடும்பம் ஒன்றுக்கு நாளுக்கு ரூ.2 மட்டுமே கிடைக்கும். இது மக்களின் தேவையை ஒருபோதும் பூர்த்தி செய்யாது. அதேநேரத்தில் காங்கிரஸின் நியாய் திட்டத்தால் ஏழை குடும்பத்துக்கு மாதத்துக்கு ரூ.6,000 அளிக்கப்படும் என்றார் பிரியங்கா.

மகாகாலேஷ்வர் கோயிலில் பிரியங்கா வழிபாடு
 மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் உள்ள பிரசித்தி பெற்ற மகாகாலேஷ்வர் கோயிலில் பிரியங்கா திங்கள்கிழமை வழிபட்டார்.
மத்தியப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரியங்கா வந்தபோது, கோயிலுக்குச் சென்று பூஜை செய்து வழிபட்டார். பின்னர் உஜ்ஜைன் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம் செய்தார். மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பச்சௌரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com