சுடச்சுட

  


  அஸ்ஸாம் மாநிலம் ஹைலகண்டி மாவட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் காரணமாகப் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு செவ்வாய்க்கிழமை தளர்த்தப்பட்டது.
  ஹைலகண்டி மாவட்டத்தில் இரு பிரிவினருக்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் பலியானார். மேலும் 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தக் கலவரத்தில் 15க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. கலவரத்தைத் தொடர்ந்து, அந்த மாவட்டம் முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
  இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை தளர்த்தி ஹைலகண்டி காவல்துறை துணை ஆணையர் கீர்த்தி ஜல்லி உத்தரவிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
  மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது உங்களுக்கு (மக்கள்) சிரமத்தை ஏற்படுத்தும் என்பது தெரியும். இது தற்காலிகமானது மட்டுமே. மாவட்டத்திலுள்ள சமூக விரோதக் கும்பல்களைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டியது அவசியமாகும்.
  சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் எதையும் மக்கள் நம்ப வேண்டாம். குறிப்பிட்ட தகவல்கள் மீது சந்தேகம் இருந்தால், அதை மாவட்ட நிர்வாகத்திடம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் அமைதியை ஏற்படுத்தவும், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
  ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நேரத்தில் வங்கிகள், கடைகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை செயல்பட்டன. இணையவசதிகளும் இயல்புநிலைக்குத் திரும்பின. இருப்பினும், அடுத்த 8 முதல் 10 நாள்களுக்கு இரவு நேரங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai