
வெறுப்புணர்வு ஏற்படுத்தும் பேச்சுகளைத் தவிர்த்து, கொள்கையின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து தான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து தற்போது உண்மையாகி விட்டது என காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் செவ்வாய்க்கிழமை கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அரசியல்தளத்தில் புதிய நடைமுறையினைப் புகுத்த நான் விழைகிறேன். நாட்டிலுள்ள பிரச்னைகளையும் கொள்கைகளையும் முன்னிறுத்தி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவோம். வெறுப்புணர்வையும் வன்முறையையும் ஏற்படுத்தும் வகையிலான பேச்சுகளைத் தவிர்ப்போம். அது நாட்டுக்கு நல்லதல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் பிரசாரங்களில் பல தலைவர்கள் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பேச்சுகளில் ஈடுபட்டுவரும் சூழலில் ராகுல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.