சுடச்சுட

  

  சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: காஷ்மீரில் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 15th May 2019 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  srinagar1

  சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறையினர் மீது கல்வீச்சில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்.


  மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ஜம்மு-காஷ்மீரில் இரண்டாவது நாளாக பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமையும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
  பந்திபோரா மாவட்டத்தின் சம்பல் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமியை, மர்ம நபர் ஒருவர் கடந்த 9-ஆம் தேதி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியதாக அந்தக் குழந்தையின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் நபர் ஒருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
  இந்நிலையில், இந்தச் சம்பவத்தைக் கண்டித்து செவ்வாய்க்கிழமையும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:
  சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து, பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் வலியுறுத்தினர்.
  போராட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் அவர்கள் பங்கேற்றனர்.
  சில பகுதிகளில் மாணவர்கள் அவர்களின் கல்லூரி வளாகத்துக்குள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட மாணவர்களுக்கு பாதுகாப்புப் படையினர் அனுமதி அளிக்காததையடுத்து, இரு தரப்பினரிடையேயும் சிறிய அளவில் மோதல் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருந்தன.  
  மாணவர்கள், வழக்குரைஞர்கள், பல்வேறு அரசு சாரா அமைப்புகள் உள்ளிட்டோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
  முன்னதாக, இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து, மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai